வாஷிங்டன் : தென் சீன கடலில் எரிச்சலூட்டும் வகையிலும் பாதுகாப்பற்ற செயல்களிலும் ஈடுபடுவதை நிறுத்துமாறு சீனாவுக்கு, அமெரிக்க வெளியிறவுத் துறை எச்சரிக்கை தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டு உள்ள அறிக்கையில், பெய்ஜீங் அதன் ஆத்திரமூட்டக் கூடிய மற்றும் பாதுகாப்பற்ற நடவடிக்கைகளில் இருந்து விலகிக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும், தென் சீனக் கடலில் சீனாவின் நடவடிக்கைகளை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தென் சீனக் கடலில் கொட்டிக் கிடக்கும் எண்ணெய் வளத்தை ஒற்றை ஆளாக கைப்பற்ற சீனா கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக திட்டம் தீட்டி வருகிறது. அதேநேரம் சீனாவுக்கு போட்டியாக மலேசியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளும் தென் சீன கடலுக்கு சொந்தம் கொண்டாடி வருகின்றன.
அந்த நாடுகளை அச்சுறுத்தும் வகையில் தென் சீனக் கடலில் குட்டி குட்டித் தீவுகளை அமைத்தும், ராணுவ வீரர்கள், கடல் மற்றும் விமானப் படைகளை குவித்தும் சீனா வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் பிலிப்பைன்ஸ் கடற்பரப்பில் சீனா அத்துமீறி நுழந்ததாக கூறப்படுகிறது. அதேநேரம் பிலில்பைன்ஸ் கடற்படை போர்க் கப்பலும் ரோந்து பணியில் ஈடுபட்ட நிலையில், இரு கப்பல்களும் மோதிக் கொள்ளும் சூழல் நிலவியது.
இது தொடர்பாக உலக நாடுகளுக்கு பிலிப்பைன்ஸ் தெரிவித்ததை அடுத்து, அமெரிக்கா தன் கண்டனத்தை தெரிவித்து உள்ளது. தென் சீனக் கடலில் இருக்கு எண்ணெய் வளத்தை எடுக்க சீனாவுக்கு தடையாக அமெரிக்கா இருக்கிறது. அதேபோல் கடந்த பிப்ரவரி மாதமும் தென்சீனக் கடலில் சீனா லேசர் கருவிகள் பொருத்திய போர்க் கப்பலை கொண்டு பயிற்சியில் ஈடுபட்டதாக பிலிப்பைன்ஸ் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது.
அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன் தென் சீனக் கடற்பகுதியில் உள்ள மலேசிய எண்ணெய் கிடங்குகள் இருக்கும் இடம் அருகே சீன போர்க் கப்பல்கள் அத்துமீறி நுழந்தன. தென் சீனக் கடலில் சீனாவின் ஊடுருவல்களை தவிர்க்க அமெரிக்காவும் தன் படைகளை குவித்து பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டி வருகிறது.
நட்பு நாடுகளுக்கு ஆதரவாக தென் சீனக் கடலில் அமெரிக்காவின் போர்க் கப்பல்கள் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. தென் சீனக் கடலில் சீனா ஊடுருவல்கள் தொடர்பான புகைப்படங்கள் மட்டும் வீடியோ வெளியிடப்பட்டு உள்ள நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு ஆதரவாக அமெரிக்கா இணைந்து செயல்படும் என அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இதையும் படிங்க : சூடானில் இருந்து வந்த 117 இந்தியர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர் - கரோனாவுக்கு இல்லை?