மணிலா: பிலிப்பைன்ஸின் வடக்கு பதியில் காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் மணிலாவில் நிலநடுக்கத்தை அடுத்து மக்கள் கட்டடங்களை விட்டு வெளியேறி சாலையில் குவிந்துள்ளனர்.
7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் அப்ரா மாகாணத்தைச் சுற்றிய மலைப் பகுதியில் மையம் கொண்டிருந்ததாகவும், தொடர்ந்து பல அதிர்வுகள் ஏற்பட்டதாகவும் பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுவரை உயிரிழப்புகள் ஏதுமில்லை எனவும் வீடுகளிலும், கட்டடங்களிலும் சிறு விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலநடுக்கம் சற்று கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என அமெரிக்க வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பசிபிக் பெருங்கடலில் நெருப்பு வளையப் பகுதியில் (Ring of Fire) அமைந்துள்ள பிலிப்பைன்ஸ், உலகளவில் அதிக நிலநடுக்கங்கள் ஏற்படும் பகுதியாகும்.
ஒவ்வொரு ஆண்டும், சுமார் 20 சூறாவளி மற்றும் வெப்பமண்டல புயல்களால் பிலிப்பைன்ஸ் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், உலகின் மிகவும் பேரழிவு பாதிப்புக்குள்ளான நாடுகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. 1990ஆம் இதே வடக்கு பிலிப்பைன்ஸில் 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 2 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: ஜப்பானில் எரிமலை வெடிப்பு... 2 நகர மக்கள் வெளியேற்றம்...