கொழும்பு: இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் தொடர்ந்து மக்கள் பல துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். அத்தியாவசிய பொருள்கள், எரிபொருள் விலையேற்றத்தால் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
மிரளவைக்கும் மின்வெட்டு: இலங்கையின் பெரும்பாலான இடங்களில் தினமும் குறைந்தது 10 மணிநேரத்திற்கு மேலாக மின் விநியோகம் தடைபடுகிறது. மேலும், மார்ச் 8ஆம் தேதி முதல் டாலருக்கு நிகரான இலங்கை ரூபாய், 90 ரூபாய்க்கு உயர்ந்து கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால், கடும் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கும் மக்கள், நாடு முழுவதும் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ராணுவ வாகனங்கள் எரிப்பு: இந்நிலையில், கொழும்பு நகரின் மிரிஹான பகுதியில் உள்ள இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே வீட்டை போராட்டக்காரர்கள் நேற்று (மார்ச் 31) இரவு முற்றுகையிட்டனர். அப்போது நடந்த தடியடியில் செய்தியாளர்கள் உள்பட 10 பேர் காயமடைந்தனர். அதில், ஆறு பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையிலும், நான்கு பேர் தெற்கு கொழும்பு பயிற்சி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இலங்கை ராணுவத்தின் பேருந்து மற்றும் ஜீப்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. வடக்கு கொழும்பு, தெற்கு கொழும்பு, மத்திய கொழும்பு, நுகேகொடை ஆகிய பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பெருந்துயரில் இலங்கை - அத்தியாவசியத்திற்கு அலைக்கழிக்கப்படும் மக்கள்