ஜோகன்னஸ்பார்க் : தென் ஆப்பிரிக்காவில் அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உள்பட 64 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தென் ஆப்பிரிக்காவின், ஜோகன்னஸ்பார்க் நகரில் உள்ள 5 மாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய மாவட்டத்தின் பொருளாதார மண்டலமாக திகழும் அந்த பகுதியில் இருக்கும் அடுக்குமாடி கட்டடத்தில் அதிகாலை வேளையில் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.
5 மாடி கட்டடத்தில் சட்டவிரோதமாக குடியேறிய அகதிகள் குடியிருந்ததாகவும், இந்நிலையில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்து உள்ளனர். தீ விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில், அதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இந்த கோர தீ விபத்தில் குழந்தைகள், பெண்கள் என ஏறத்தாழ 64 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பல்வேறு தீக்காயங்களுடன் 43 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பலர் தீவிர காயங்களுடன் சேர்க்கப்பட்டு உள்ளதால் உயிர் பலி அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் மொத்தமாக எத்தனை பேர் இருந்தனர் என்பது குறித்த தகவல்கள் ஏதும் கிடக்காததால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டு உளளதாக அதிகாரிகள் கூறி உள்ளனர். கட்டட தீ விபத்தில் உருவான புகை மூட்டத்தால், பலர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு சுவாச பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மீட்பு படையினர் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க : ISRO: நிலவில் கந்தகம் இருப்பதை மீண்டும் உறுதி செய்தது பிரக்யான் ரோவர் - இஸ்ரோ தகவல்!