இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான கைது நடவடிக்கை சட்டவிரோதம் எனக் கூறிய பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அவரை உடனடியாக விடுதலை செய்யக் கோரி உத்தரவிட்டது.
இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்துக்கு வழக்கு விசாரணைக்காக ஆஜராக வந்த முன்னாள் பிரதமர் இம்ரான் கானை நீதிமன்ற வாசலிலேயே வைத்து பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். பாகிஸ்தான் உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் குறித்து அவதூறு கருத்து கூறியதாக இம்ரான் கான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது.
இம்ரான் கான் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பாகிஸ்தான் முழுவதும் பெரும் கலவரம் வெடித்தது. இம்ரான் கானின் தெஹ்ரீக் இன் இன்சாப் கட்சித் தொண்டர்கள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இம்ரான் கானுக்கு செல்வாக்கு அதிகம் இருப்பதாக காணப்படும் பலுசிஸ்தான் உள்ளிட்ட மாகாணங்களில் கடும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.
மக்கள் வீதிகளில் இறங்கி கலவரத் தாக்குதலில் ஈடுபட்டனர். துப்பாக்கிச் சூடு கலவரத்தில் ஏறத்தாழ 10க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இம்ரான் கானை விடுதலை செய்யக் கோரி நாடு தழுவிய போராட்டத்திற்கு தெஹ்ரீக் இ இன்சாப் கட்சித் தொண்டர்கள் அழைப்பு விடுத்து இருந்தனர்.
இந்நிலையில், இம்ரான் கானை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனால் பாகிஸ்தான் கூடுதல் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின. அதேநேரம் இம்ரான் கானை விடுதலை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டன.
இம்ரான் கான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், என்.ஏ.பி எனப்படும் தேசிய பொறுப்புடமை அமைப்பு உச்ச நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம்சாட்டியது. நாட்டில் உள்ள அனைவருக்கும் நீதிமன்றத்தை அணுகும் உரிமை உள்ளதாக கூறிய உச்ச நீதிமன்றம், முன் அனுமதியின்றி இம்ரான் கானை கைது செய்யததாக குற்றஞ்சாட்டியது.
மேலும் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற ஊழியர்களும் சட்டவிரோதமாக இம்ரான் கைதுக்கு துணை போனதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து இம்ரான் கானை ஒரு மணி நேரத்திற்குள் உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து மாலையில் இம்ரான் கான் உச்ச நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டார். இம்ரான் கான் அழைத்து வரப்படுவதை முன்னிட்டு உச்ச நீதிமன்றத்தில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் பூட்டிய அரங்கில் வைத்து நீதிமன்ற விசாரணை நடைபெற்றது. மனு குறித்து விசாரணை நடத்திய நீதிபதிகள் இம்ரான் கைது செய்யப்பட்டது சட்ட விரோதமானது எனத் தெரிவித்தனர்.
நீதிமன்ற பதிவாளரின் முன் அனுமதியின்றி பாதுகாப்புப் படையினர் எப்படி இம்ரான் கானை கைது செய்தனர் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தேசிய பொறுப்புடமை அமைப்பு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறிய நீதிபதிகள், இம்ரான் கானை உடனடியாக விடுதலை செய்யக்கோரி உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க : நிர்வாக சேவைகளில் ஆளுநரைவிட முதலமைச்சருக்கே அதிகாரம் அதிகம் - உச்ச நீதிமன்றம் அதிரடி!