சியோல்: வடகொரியா அணு ஆயுதங்கள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை அவ்வப்போது சோததை செய்து, உலக நாடுகளுக்கு அச்சுறுத்தி வருகிறது. இதுபோன்ற அணு ஆயுத சோதனைகளை வட கொரியா கைவிட வேண்டும் என அதன் அண்டை நாடான தென்கொரியா வலியுறுத்தி வருகிறது.
இதில் தென்கொரியாவுக்கு ஆதரவாக நிற்கும் அமெரிக்கா, இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த வட கொரியாவுக்கு அழைப்பு விடுத்து வருகிறது. ஆனால், வடகொரியா இதற்கு உடன்படாமல், தொடர்ந்து ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது. தங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தடைகளை நீக்கும்வரை பேச்சுவார்த்தைக்கு இடம் இல்லை என்றும் வடகொரியா தெரிவித்துள்ளது.
வடகொரியாவின் அச்சுறுத்தலுக்கு ஈடு கொடுக்கும் வகையில், அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் ராணுவப்படைகள் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், வட கொரியா கிழக்கு கடற்பகுதியை நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவி சோதனை செய்ததாக தென் கொரியா தகவல் தெரிவித்துள்ளது. வடகொரியா ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக இந்த ஏவுகணை சோதனையை செய்துள்ளது.
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் நாளை (செப்.29) தென்கொரியா செல்லவுள்ள நிலையில் இந்த ஏவுகணை சோதனையை வடகொரியா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.