நித்தியானந்தாவின் நாடு என கூறிக்கொள்ளும் கைலாசா சார்பில் சாமியாரின் உடல்நலன் குறித்த புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. வழக்கம் போல சமாதியிலிருந்து நேரடி தகவல் என குறிப்பிடப்பட்டுள்ள அந்த செய்தியில், வெதுவெதுப்பான தண்ணீரும் தனக்கு கொதியாய் கொதிக்கிறது, குளித்த பின்னர் உடலை துவட்டினாலும் வலிக்கிறது என கூறியுள்ளார்.
ஆனாலும் தோப்புக்கரணம், சாஷ்டாங்க நமஸ்காரம் உள்ளிட்டவை அடங்கிய நித்திய சிவபூஜையை மட்டும் தன்னால் செய்ய முடிகிறது எனவும் நித்தியானந்தா கூறியுள்ளார். தன்னைச் சுற்றியுள்ள மருத்துவர்களும் பக்தர்களுக்கும் தனது உடல் நலன் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகவும் கூறியுள்ள நித்தி, ஒரு நாள் யாரும் இல்லாத போது தன்னிச்சையாக நடக்க முயன்றதாகவும், ஆனால் நிலைகுலைந்து கீழே விழுந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
ஆனாலும் ஜடா முடி இருந்ததால், நல்ல வேளையாக தனது தலையில் ஏதும் காயமில்லை என கூறியுள்ள நித்தியானந்தா. காலில் மட்டும் லேசான எலும்பு கீறல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். ஆனாலும் தனக்கு வலி ஏதும் இல்லை என கூறியுள்ள நித்தியானந்தா, லேசாக விபூதியை அப்ளை செய்து விட்டு தன் வேலையை தொடர்வதாக சிஷ்யைகள் மட்டும் நம்பும் கதைகளை அவிழ்த்து விட்டுள்ளார்.
இருப்பினும் தான் உயிரோடு தான் இருக்கிறேன் என்பதற்கு ஆதாரம் வெளியிடுவதாக கூறி. ஒரு தாளில் கையெழுத்திடுவது போன்ற புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். தன்னுடைய முகநூல்பதிவுகளை வேறுயாரோ வெளியிடுவதாக கூறுவோருக்கு இதுவே ஆதாரம் என்றும் நித்தியானந்தா கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அனுதாபம் தேடுகிறாரா நித்தியானந்தா? கைலாசாவில் நடப்பது என்ன?