கனடா: கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சர்ரே நகரில், காலிஸ்தான் ஆதரவாளரான ஹர்தீப் சிங் நிஜார் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஹர்தீப் சிங், சர்ரேயில் உள்ள குருத்வாராவுக்கு வெளியே கார் பார்க்கிங்கில் நின்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத இருவர் திடீரென துப்பாக்கியால் சுட்டதாகத் தெரிகிறது.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கும் சர்ரே நகரில் குருத்வாராவுக்கு வெளியே நடந்த இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹர்தீப் சிங் நிஜார், பஞ்சாப் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். கடந்த ஆண்டு, பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் ஒரு இந்து மத போதகரைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக, காலிஸ்தான் புலிப்படை என்ற தடை செய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் 40 பேரை தேடப்படும் பயங்கரவாதிகளாக என்ஐஏ அறிவித்தது.
அந்த அமைப்பின் தலைவராக கருதப்படும் ஹர்தீப் சிங் நிஜாரைக் கண்டுபிடித்துக் கொடுத்தால் பத்து லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தது. அதேபோல், நாட்டுக்கு எதிரான பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட சதி செய்த வழக்கில், ஹர்தீப் சிங் நிஜார் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்திருந்தது.
முன்னதாக கடந்த மே மாதம், காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பான காலிஸ்தான் கமாண்டோ படையின் தலைவர் பரம்ஜித் சிங் பஞ்ச்வார் பாகிஸ்தானின் லாகூரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தியாவிலிருந்து பஞ்சாபை தனியாக பிரித்து சீக்கியர்களுக்காக காலிஸ்தான் என்ற தனி நாட்டை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் காலிஸ்தான் கமாண்டோ படை 1980-களில் உருவாக்கப்பட்டது.
இந்திய அரசால் தடை செய்யப்பட்ட இந்த படையின் தலைவராக இருந்து வந்தவர் பஞ்ச்வார். இவர் இந்தியாவிலிருந்து தப்பித்து பாகிஸ்தான் சென்று, இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வந்தவர். பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்கள் மூலம் இந்தியாவுக்கு போதைப் பொருட்கள், ஆயுதங்களைக் கடத்துவது உள்ளிட்ட சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இவருக்கு பாகிஸ்தான் அரசு உதவியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், பஞ்ச்வார் தங்கள் நாட்டில் இல்லை என பாகிஸ்தான் மறுத்தது.
இதையும் படிங்க: அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் துப்பாக்கிச்சூடு… 6 பேர் பலி!