ஜனவரி 8ஆம் தேதி மாலை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தன் இணக்கமான உரையில், ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராக உள்ளேன் என விரும்பம் தெரிவித்தார். இதன் காரணமாக எண்ணெய் விலை குறைந்து, பங்குச் சந்தை ஏற்றம் கண்டது. ஆனால் இது தற்காலிமானதுதான்.
12 தொலை துார ஏவுகணைகளைக் கொண்டு ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்க விமானத் தளங்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட ஈரான், அமெரிக்காவுடனான மோதலை தணித்ததோடு மட்டுமல்லாமல், அதன் ராணுவ பலத்தை புலப்படுத்தியுள்ளது.
ஜனவரி 3ஆம் தேதி ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் சிறப்புப் பிரிவான குத்ஸின் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இது அமெரிக்கா என்ற பெரும் பூதத்தையும், இஸ்லாமிய மதகுருக்களால் ஆட்சி செய்யப்பட்டு வரும் ஈரானுக்கும் இடையே புதிய மோதலை வெடிக்கச் செய்துள்ளது. இதனால், மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் போர் பதற்றம் தொற்றியுள்ளது.
இதையும் படிங்க : போருக்கு அறைகூவல்: 2020ஐ அதிர்வுடன் ஆரம்பித்துவைத்த அமெரிக்கா
ஈரானில் 1979ஆம் ஆண்டு மாணவர் புரட்சியை அடுத்து, அந்நாட்டை ஆட்சிசெய்துவந்த ஷா அதே ஆண்டு பிப்ரவரி மாதம் நாட்டைவிட்டு தப்பியோடினார். அதன்பிறகு, ஒழுக்கமும் கட்டுப்பாடும் மிக்க இஸ்லாமிய மதகுரு அயத்துல்லா ரவுல்லா கோமினி இஸ்லாமிய மத ஆட்சியை நிறுவினார். அந்த ஆண்டு நவம்பர் மாதம், தீவிரவாதக் கொள்ளைகள் கொண்ட மாணவர்கள் அமெரிக்கத் தூதரகத்தை கைப்பற்றி, 52 தூதர்களை சிறைபிடித்து அவர்களை 444 நாட்கள் பிணையில் வைத்திருந்தனர். அன்றிலிருந்து, ஈரானும் அமெரிக்காவும் கீரியும் பாம்புமாக மோதி வருகின்றன.
ஈரானின் இஸ்லாமிய மதகுருமார்கள் ஆட்சியை ஆட்டம் காணச்செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் அமெரிக்கா சிறப்பாகவே செய்து வருகிறது.
1980–1988 ஈரான் – ஈராக் போரின்போது அமெரிக்கா, ஈராக் அதிபர் சதாம் உசேனை ஆதரித்ததோடு மட்டுமல்லாமல் தாராளமாகப் பணம், ஆயுதம், யுத்தப் பயிற்சி ஆகிய உதவிகளை அளித்தது. சவுதி அரேபியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுடனான அமெரிக்கா நட்புறவு பாராட்டி வந்ததால் பிரச்னை மேலும் சிக்கலாகியது.
ஈரான் முன்னாள் அதிபர் முகமது அகதுநிஜாத், "இஸ்ரேல் ஒரு மானம்கெட்ட நாடு, அதைப் புவியிலிருந்தே துடைத்தெறிய வேண்டும்" என கடுமையாகச் சாடியுள்ளார். இவரைப் போன்ற ஈரானிய தலைவர்கள் பலர் இஸ்ரேலை அடியோடு வெறுக்கிறார்கள்.
ஈரான் அணு ஆயுத லட்சியத்துக்கு முட்டுக்கட்டை
அந்நிய சக்திகளின் சவால்களைச் சமாளிக்கும் பொருட்டு ஈரான் ரகசியமாக அணு ஆயுதங்களை தயாரிக்கும் வேலையில் இறங்கியது. இதற்கு தேவையான உதவிகள், கருவிகளை பாகிஸ்தான் வழங்கியது. ஈரானின் அணு ஆயுத லட்சியத்தை முறியடிக்கும் நோக்கில் அந்நாட்டின் மீது ஐநா, அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தன.
பின்னர் அன்றைய அமெரிக்க அதிபர் ஒபாமாவின் முயற்சியால், 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம், பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷ்யா, ஜெர்மனி ஆகிய வல்லாதிக்க நாடுகளுடன் ஈரான் JCPOA என்றழைக்கப்படும் ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்தை மேற்கொண்டது. இது ஈரானிய அணு ஆயுத லட்சியத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் திருப்புமுனையாக அமைந்தது.
ட்ரம்ப் வருவகையால் கவிழ்ந்த ஒப்பந்தம்
ஆனால், 2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் பரப்புரையின்போது ட்ரம்ப் இந்த ஈரான் அணு சக்தி ஒப்பந்தம் நாட்டுக்கு தூரோகம் இழைத்துள்ளதாகவும், பெரும் வராலாற்றுப் பிழை என்றும் கடுமையாகச் சாடினார். மேலும், தான் வெற்றிபெற்றால் மேற்படி ஒப்பந்தத்திலிருந்த அமெரிக்காவை விலக்கிடுவேன் என சூளுரைத்தார்.
தான் கூறியது போலவே, 2018ஆம் ஆண்டு மே மாதம் ஈரான் அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை வெளியேற்றினார். ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்து, அந்நாட்டிடமிருந்து எந்த நாடும் கட்சா எண்ணெய் வாங்கக் கூடாது என வலியுறுத்தினார்.
இந்த முறை ஈரான் மீது அமெரிக்கா விதித்த பொருளாதாராத் தடையை ஐநா அங்கீகரிக்க மறுத்துவிட்டது. இத்தகைய அதிகார சூழ்ச்சி வலையில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளும் விழ மறுத்தன.
பக்கச்சார்பற்ற இந்தியா
தொன்றுதொட்ட காலத்திலிருந்து ஈரானுடன் இந்தியா நல்லுறவு கொண்டுள்ளது. இந்தியாவின் ஹைட்ரோ கார்பன் தேவைகளைப் புர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல் எட்டு மில்லியன் இந்தியர்களுக்கு ஈரான் வேலைவாய்ப்பு அளித்துவருகிறது. அவர்கள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் இந்தியா 40 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான அந்நிய செலாவணியைப் பெற்றுவருகிறது.
அமெரிக்காவுடனும் நமக்கு வலுவாக உறவு உள்ளதால், அமெரிக்கா, ஈரான் என யார் பக்கமும் சாயாமல் இந்தியா நடுநிலை காக்கிறது. ஈரான்-அமெரிக்கா மோதலில் இந்தியா மத்தியஸ்தராகச் செயல்பட வேண்டும் என்ற ஈரானிய தூதரின் கோரிக்கையை இந்தியா மறுத்துவிட்டது. மூன்றாம் தரப்புப் பிரச்னையில் இந்தியா எப்போதுமே தலையிட்டத்தில்லை. போதியவரையில் அதனைத் தவிர்க்கவே பார்க்கும்.
ஈரானுக்கு எதிரான அமெரிக்க அரசின் பொருளாதாரத் தடைகளால் தொய்வுற்றுள்ள ஈரான் தன் கோபத்தை வெளிபடுத்தும் விதமாக, ஈராக், சிரியா, லெபனான் போன்ற நாடுகளில் உள்ள தனது பதிலாட்களின் (Proxy) மூலம் அமெரிக்க சொத்துக்களையும் ராணுவ வீரர்களையும் தாக்க ஊக்குவித்தது.
அமெரிக்க ஒப்பந்ததாரரின் கொலையால் முற்றிய மோதல்
ஈராக்கின் கிர்குக் பகுதியில் உள்ள ராணுவத் தளம் மீது ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்க ராணுவ ஒப்பந்ததாரர் ஒருவர் கொல்லப்பட்டார். அதன் விளைவாக, ஆளில்லா விமானம் மூலம் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் தாக்குதல் மேற்கொண்டு ஈரான் பாதுகாப்புப் படை தளபதி காசிம் சுலைமானியை கொன்றது அமெரிக்கா.
சுலைமானியின் மரணத்துக்கு அமெரிக்காவைப் பழிவாங்கும் நோக்கில், ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது 12 ஏவுகணைகளை ஏவி ஈரான் தாக்குதல் நடத்தியது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், அந்த தாக்குதல் மூலம் ஒரு அமெரிக்கர் கூட இறக்கவில்லை, ஆனால் பொருட் சேதம் குறித்து விரிவாக மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாகக் கூறியிருந்தார்.
சாதூர்யமாக மோதலை தணித்த ஈரான்
அமெரிக்க தரப்பில் எந்த உயிர்ச்சேதமும் இல்லை என்ற செய்தி மெதுவாக கசியத் தொடங்கியது. அதற்குச் சாத்தியமில்லை என்ற எண்ணம் அனைவர் மனதிலும் தோன்றிய வேளையில், ஈரான் தனது குடிமக்களை சமாதானப்படுத்தவதற்காக் மேற்கொள்ளப்பட்ட ஒரு போலி நாடகம் இது என்பது தெளிவானது.
இத்தகைய செய்தி அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகளுக்கு ஈராக் மூலமும் பிற வழிகளிலும் கொடுக்கப்பட்டது. அமெரிக்காவின் ராணுவ பலத்தை புரிந்துகொண்டு ஈரான் மேற்கொண்ட திறன் மிக்க ராஜதந்திர நடவடிக்கையாகும். இதன் விளைவாக மேலோட்டமான அமைதி நிலவுகிறது.
ஈரானும் அமெரிக்காவும் தங்கள் பகையை மறந்து நட்பு பாராட்டுவார்கள் என்று எள்ளளவும் நம்ப முடியாது.
மேற்கு ஆசியாவைப் பொறுத்தவரை மன்னித்தல் என்பது பலவீனத்தின் வெளிப்பாடாகக் கருத்தப்படுகிறது. அது ஒரு உயரிய பண்பாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
பழிக்குப்பழி வாங்குவது இழந்த கௌரவத்தையும் தேசிய பெருமையையும் மீட்டெடுப்பதற்கு ஒப்பானதாகவே கருதப்படுகிறது. ஈரானின் இத்தகைய நடவடிக்கைகள் ஒரு தந்திரமான பின்வாங்குதலாகும்.
ஆனால் பிரிதொரு நாள் இதற்கான யுத்தம் நடைபெறலாம். குறுகிய காலத்திற்கு இந்தப் போர் அபாயமானது தவிர்க்கப்பட்டிருந்தாலும் நெடுங்காலத்திற்கு இந்த அபாயம் நம்மை அச்சுறுத்தும் என்பதே உண்மை.
இதையும் படிங்க : ஈரான் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஏற்பட்ட தர்மசங்கடம்!