வாஷிங்டன்: அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில், கடந்த 22ஆம் தேதி இரவு பத்து மணியளவில், U-Haul டிரக் ஒன்று வேகமாக வந்து வெள்ளை மாளிகையின் முன்பு காவல்துறையினர் போட்டு வைத்திருந்த தடுப்புகள் மீது மோதியது. இதைப் பார்த்த போலீசார் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். காவல்துறையினர் வருவதற்குள் அந்த வாகனம் மீண்டும் ஒரு முறை தடுப்புகள் மீது மோதியது. பின்னர், அந்த வாகனத்திலிருந்து இறங்கிய இளைஞர் ஒருவர் நாஜிக் கொடியை எடுத்து காண்பித்ததோடு, அமெரிக்க அதிபர் பைடனை கொலை செய்துவிட்டு, தான் அதிகாரத்தைப் பிடிப்பேன் என்றும் முழங்கியதாக தெரிகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், டிரக்கை ஓட்டி வந்த இளைஞரை கைது செய்தனர். அந்த இளைஞர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 19 வயதான சாய் வர்ஷித் கந்துலா என்பது தெரியவந்தது. இதையடுத்து இளைஞரை கைது செய்த போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து காவல்துறையினர் கூறும்போது, "இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சாய் வர்ஷித் மிசோரியில் உள்ள செஸ்டர்ஃபீல்டு பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர், U-Haul நிறுவனத்திலிருந்து டிரக்கை வாடகைக்கு எடுத்து வந்து, வெள்ளை மாளிகையின் தடுப்புகள் மீது வேண்டுமென்றே மோதியுள்ளார். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
வெள்ளை மாளிகையை தாக்குவதற்கு கடந்த ஆறு மாதங்களாக திட்டமிட்டுவந்ததாக இளைஞர் கூறினார். வெள்ளை மாளிகைக்குள் நுழைந்து அதிபரை கொலை செய்துவிட்டு, ஆட்சியைக் கைப்பற்றுவதே தனது நோக்கம் என்று கூறினார்.
நாஜிக்கொடி குறித்து கேட்டபோது, ஹிட்லரை தான் ஒரு வலுவான தலைவராக நினைப்பதாகவும், அவரைப் போற்றுவதாகவும் தெரிவித்தார். அதிபரைக் கொல்ல முயன்றதை இளைஞர் ஒப்புக் கொண்டார். அவர் மீது அமெரிக்க அதிபரை கொல்ல சதி செய்தது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன" என்றனர்.
இந்த சம்பவத்தையடுத்து போலீசார், சாய் வர்ஷித் தங்கியிருந்த செஸ்டர்ஃபீல்டில் பகுதியில் ஆய்வு செய்தபோது, அவர் தனது குடும்பத்தினரை தொடர்பு கொண்டது தொடர்பாகவோ, குடும்பத்தினர் தொடர்பாகவோ எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.
மேலும், செஸ்டர்ஃபீல்டில் பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் இளைஞருடன் படித்தவர்களிடம் விசாரித்ததில், சாய் வர்ஷித் மிகவும் அமைதியானவர் என்றும், இதுபோன்ற செயலை அவர் செய்தார் என நம்ப முடியவில்லை என்றும் தெரிவித்தனர். அதிகம் பேசாத கூச்ச சுபாவம் கொண்டவராகவே காணப்பட்டார் என்றும் தெரிவித்தனர்.
சாய் வர்ஷித்தின் நண்பர் ஒருவர் நியூயார்க் போஸ்ட் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், சாய் வர்ஷித்தின் மனநிலை குறித்து கவலை கொள்வதாகவும், அவருக்கு குடும்பத்திலோ, தனிப்பட்ட வாழ்க்கையிலோ ஏதேனும் பிரச்சினைகள் இருக்கலாம் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பென்டகனில் வெடி விபத்தா? ட்விட்டரில் பரவிய புகைப்படத்தால் எலான் மஸ்குக்கு சிக்கலா?