அமெரிக்கா: கடந்த அக்டோபர் 7 அன்று தொடங்கிய இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையிலான போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த போரினால் காசா பகுதி முழுவதும் மிகுந்த சேதத்திற்கு உள்ளாகி உள்ளது. இதில் 33 குழந்தைகள் உள்பட 1,200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர். மேலும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேநேரம் காசாவின் சுகாதார அமைச்சகத்தின்படி, குறைந்தது 18,205 பாலஸ்தீனியர்கள் இந்தப் போரில் கொல்லப்பட்டு உள்ளனர். இவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். அது மட்டுமல்லாமல், 46,645 பேர் காயம் அடைந்து இருக்கின்றனர். இதனிடையே, இந்தப் போரை நிறுத்துவதற்கு பல்வேறு தரப்பில் இருந்து வலியுறுத்தல்களும், கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டன.
இதனிடையே, இரு தரப்பும் போரை நிறுத்தி, பணயக்கைதிகளை விடுவிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டன. இருப்பினும், இது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. இந்த நிலையில், நேற்று (டிச.12) கூடிய ஐக்கிய நாடுகள் சபையின் அவசர கூட்டத்தில், ஒரு வரைவு தீர்மானத்தை எகிப்து தாக்கல் செய்தது.
இதில், உடனடி மனிதாபிமான போர் நிறுத்தத்தை செய்ய வேண்டும் என்றும், பிடித்து வைத்திருக்கும் பிணயக்கைதிகளை எந்தவித நிபந்தனையும் இன்றி அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்பதை அடங்கியதாக இருந்தது. இவ்வாறு இதனை எகிப்து தாக்கல் செய்ய, அல்ஜீரியா, பக்ரைன், ஈராக், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகள் உடனடி மனிதாபிமான போர் நிறுத்தத்தை வலியுறுத்தின.
இதனையடுத்து, இந்த வரைவு தீர்மானத்தை அமெரிக்கா முன்மொழிந்தது. இவ்வாறு முன்மொழியப்பட்ட வரைவு தீர்மானத்தின் மீது 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் இந்தியா உள்பட 153 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. 10 உறுப்பு நாடுகள் எதிர்த்த நிலையில், 23 நாடுகள் வாக்களிக்கவில்லை.
முன்னதாக, கடந்த அக்டோபரில் ஐக்கிய நாடுகள் கவுன்சிலால் கொண்டு வரப்பட்ட உடனடி போர் நிறுத்தம் மற்றும் காசா பகுதியில் உடனடி மனிதாபிமான போர் நிறுத்தம் ஆகியவற்றை தொடர்புடைய தீர்மானத்திற்கு இந்தியா வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாகிஸ்தான் ராணுவ தளத்தில் தற்கொலை படை தாக்குதல் - 23 வீரர்கள் பலி!