வாஷிங்டன்(அமெரிக்கா): ’கரோனாவிற்கு எதிரான உலகளாவியப்போராட்டத்தில் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் மற்ற எந்த நாட்டையும்விட அதிவேகமாக செயல்பட்டன’ என வெள்ளை மாளிகையின் உயர் சுகாதார அலுவலர் ஆஷிஷ் ஜா கூறினார். 'இரு நாடுகளும் தங்கள் மக்களுக்குத் தடுப்பூசி போடுவதற்கான முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ளது. மேலும் தொற்றுநோயைச் சமாளிக்க மற்ற நாடுகளுக்கு ஆதரவளித்து நிவாரணம் வழங்கின’ எனத் தெரிவித்தார்.
வெள்ளை மாளிகையின் கரோனா வைரஸ் பரவல் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஆஷிஷ் ஜா, கடந்த இரண்டரை ஆண்டுகளில் கரோனா தொற்றுநோய் குறித்து சிந்திக்கவும், வேலை செய்யவும் மட்டுமே நேரம் செலவானதாகக் கூறினார். அமெரிக்காவில் உள்ள இந்தியத்தூதரகம் சார்பில் நேற்று (ஆகஸ்ட் 15) இந்தியா ஹவுஸில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழா இந்திய -அமெரிக்கத் தூதரக அலுவலரான தரன்ஜித் சிங் சந்து தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவில் ஆஷிஷ் ஜாவிற்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய ஜா, ‘இந்தியாவின் சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் இந்திய-அமெரிக்க நட்புறவின் 75 ஆண்டுகளைக்கொண்டாடுவது நம்பமுடியாத மரியாதை மற்றும் மகிழ்ச்சியை அளிக்கிறது’ என்று அவர் கூறினார்.
இந்தோ-அமெரிக்கர்களான மூன்றரை மில்லியன் மக்கள் துடிப்பான இந்திய அமெரிக்க சமூகத்தை மேலும் புதுமையாக்கியுள்ளனர் எனத் தெரிவித்தார். இதனை நினைவூட்டிய நமது அதிபர் ஜோ பைடனின் வார்த்தைகளுக்கு பெருமைமிக்க இந்திய-அமெரிக்கன் என்ற முறையில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்’ எனக் கூறினார்.
இந்தியாவும் அமெரிக்காவும் உலகின் மிக முக்கியமான இரண்டு ஜனநாயக நாடுகள் என்று ஜா கூறினார். மனித கண்ணியம் மற்றும் மனித சுதந்திரத்தை மேம்படுத்துதல், பன்மைத்துவம், நம்பிக்கை மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகிய பொதுவான மதிப்புகள் இரு நாடுகளையும் ஒன்றிணைத்துள்ளன என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க:சீன உளவுக் கப்பல் யுவான் வாங் 5 இலங்கை வந்தடைந்தது