இஸ்லாமாபாத்: இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக இருந்தபோது வெளிநாட்டு பயணங்கள், உலக நாடுகள் தலைவர்கள் உடனான சந்திப்பு, பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் உடனான சந்திப்பின்போது வழங்கப்பட்ட விலை உயர்ந்த கைக்கடிகாரம் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல், தனிப்பட்ட முறையில் முறைகேடாக விற்றதாக பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் குற்றச்சாட்டு தெரிவித்தது.
அரசு கருவூலத்திற்கு வரும் பரிசுப் பொருட்களை பேணிக் காக்கும் பணியை தோஷகன்னா துறை மேற்கொண்டு வந்த நிலையில், இது தொடர்பாக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
இந்த வழக்கை விசாரித்த இஸ்லாமாபாத்தை தளமாக கொண்ட மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றம், இம்ரான் கானை குற்றவாளி என அறிவித்தது. மேலும், இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டது. மேலும், 5 ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சூழல் ஏற்பட்டது.
இந்த நிலையில், செஷன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இம்ரான் கான் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், தோஷகன்னா முறைகேடு வழக்கில் இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர். இதனால் விரைவில் இம்ரான் கான் விடுதலை செய்யப்படுவார் என கூறப்பட்டது.
விசாரணையை நடத்துவதற்காக பஞ்சாப்பில் உள்ள அட்டாக் சிறைக்கு வந்த நீதிபதி அபுவல் ஹஸ்னத் சுல்கர்னைன், அரசு ரகசியங்களை வெளியிட்டதாகக் கூறப்படும் வழக்கு விசாரணையில் இம்ரான் கான் வருகிற செப்டம்பர் 13ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதன் அடிப்டையில், தற்போது இம்ரான் கான் பஞ்சாப்பில் உள்ள அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இதையும் படிங்க: Rahul Gandhi: "சீனாவின் சர்ச்சைக்குரிய வரைபடம் பற்றி பிரதமர் விளக்கமளிக்க வேண்டும்" - ராகுல்காந்தி!