சியோல்(தென்கொரியா): ஹாலோவீன் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 151 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தென்கொரிய நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த நெரிசலில் 82 பேர் படுகாயமடைந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிகழ்வை நாட்டின் பெரும் துக்கசம்பவமாக அறிவித்த தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு, தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கரும் இப்பெரும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு, தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டு, இத்தகைய கஷ்ட சூழலில், இந்தியா நிச்சயம் தென்கொரியாவுடன் துணை நிற்குமெனவும் அந்நாட்டிற்கு ஆறுதல் கூறினார்.
மேலும், இறந்தவர்களில் அதிகபட்ச பேர் 20 வயதை எட்டாத டீன் ஏஜ் இளைஞர்கள் என தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் 19 வெளிநாடுகளைச்சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளனர். ஏறத்தாழ இந்த ஹாலோவீன் கொண்டாட்டத்தில் 1 லட்சத்திற்கும் மேலான மக்கள் கூட்டம் திரண்டு இருந்தது.
வெகுநாட்களாக நீடித்து வந்த கரோனா கட்டுப்பாடுகளுக்குப்பிறகு, மக்கள் கூட்டமாய் திரளும் ஓர் நிகழ்ச்சி இதுவாகும். ஆகையால், மிகுந்த ஆவலுடன் கூடிய மக்கள் கூட்டம், இப்படி பேரிடர் சம்பவமாக மாறியது அந்நாட்டு மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: குரூப் சேட்களுக்கு ‘end to end encryption' சோதனையைத் தொடங்கியது கூகுள்