சீனாவின் வூஹான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ், உலக நாடுகளை இன்றளவும் உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.
இந்நிலையில், உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி ஐந்து கோடியே 30 லட்சத்து 92 ஆயிரத்து 733க்கும் அதிகமானோருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்து 99 ஆயிரத்து 413 பேராக அதிகரித்துள்ளது. அதேசமயம் இத்தொற்றிலிருந்து மீண்டு இதுவரை மூன்று கோடியே 72 லட்சத்து 13 ஆயிரத்து 423 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
உலகிலேயே கரோனாவால் அதிக அளவு பாதிப்புக்குள்ளான நாடுகளின் வரிசையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. தொடர்ச்சியாக தினமும் 800க்கும் அதிகமானவர்கள் கரோனாவால் உயிரிழந்து வருகின்றனர். இதுவரை அந்நாட்டில் மட்டும் ஒரு கோடியே எட்டு லட்சத்து 73 ஆயிரத்து 936 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு லட்சத்து 48 ஆயிரத்து 585 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா உலகில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் மொத்த கரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 87 லட்சத்து 28 ஆயிரத்து 795ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 686ஆக அதிகரித்துள்ளது. மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் 57 லட்சத்து 83 ஆயிரத்து 647 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.