சீனாவின் வூஹான் நகரில் கடந்தாண்டு இறுதியில் பரவத் தொடங்கியது, கரோனா வைரஸ். இந்த வைரஸ் சீனாவில் குறைந்திருந்தாலும் மற்ற நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது. கரோனாவால் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கரோனா தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், உலகம் முழுவதும் இதுவரை இரண்டு கோடியே 35 லட்சத்து 86 ஆயிரத்து 23க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 12 ஆயிரத்து 527பேர் ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் இத்தொற்றால் இதுவரை ஒரு கோடியே 60 லட்சத்து 84 ஆயிரத்து 558 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸால் 61 ஆயிரத்து 408 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 31 லட்சத்து 06 ஆயிரத்து 348ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பால் நேற்று (ஆகஸ்ட் 23) ஒரே நாளில் 836 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 57 ஆயிரத்து 542 பேர் ஆக உயர்ந்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் கரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது. ஹாட் ஸ்பாட் விக்டோரியா மாகாணத்தில் கரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மளமளவென அதிகரித்து வருகிறது. நேற்று (ஆகஸ்ட் 23) விக்டோரியாவில் மட்டும் 116 பேருக்குக் கரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 15 பேர் உயிரிழந்துள்ளனர். விக்டோரியா மாகாணத்தில் கரோனா பரவல் அதிகமாக உள்ளதைத் தொடர்ந்து, அங்கு கரோனா பரிசோதனை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆறு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தென்கொரியாவில் தொடர்ந்து புதிதாக 266 பேருக்குக் கரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த 11 நாளாக தென்கொரியாவில் மூன்றிலக்க எண்களில் கரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 17 ஆயிரத்து 333ஆக உயர்ந்துள்ளது.
முன்னதாக ஏப்ரல் மாதத்தில் தென் கொரியாவில் தொற்று எண்ணிக்கை ஒற்றை இலக்கமாகக் குறைந்தது. அதன் பிறகு சமூக இடைவெளி தொடர்பான கட்டுப்பாடுகள் மே மாதத்தில் தளர்த்தப்பட்டன. இந்நிலையில் மக்கள் புழக்கம் அதிகரித்ததும் அங்கு இரண்டாம் கட்டப் பரவல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால், மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அந்நாட்டு அரசு வலியுறுத்தியுள்ளது.
நியூசிலாந்து நாட்டில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட கரோனா தொற்று மீண்டும் அதன் தாக்கத்தை அதிகரித்துள்ளது. இதனால் அடுத்த மாதம் நடைபெற இருந்த தேர்தலை ஒரு மாதம் தள்ளி வைத்து அக்டோபர் மாதம் நடைபெறும் என அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் அறிவித்துள்ளார். கடந்த நான்கு வார காலமாக ஆக்லாந்தில் நகரங்களில் ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் ஆகஸ்ட் 26ஆம் தேதியுடன் இது நிறைவடைகிறது.
இருப்பினும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே கரோனா நோய்த்தொற்றால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடாக அமெரிக்கா முதலில் உள்ளது. இரண்டாவதாகப் பிரேசில், அடுத்தபடியாக இந்தியா உலகில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் குறைந்தளவே இறப்பு விகிதங்கள் இருந்தாலும், இந்த நோய் நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது.
இதையும் படிங்க: இந்தியாவில் 3.52 கோடியை கடந்த கரோனா பரிசோதனை