தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸில் அக்டோபர் 27 அன்று இரவில் மையம் கொண்ட ‘நால்கே’ புயலினால், நாட்டின் சதுப்பு பகுதியான பாங்க்சமோரோவில் உள்ள குஷியோங்கில் பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளது. கனமழை மற்றும் நிலச்சரிவுகளினால் இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளதாக உள்துறை அமைச்சர் நகுயிப் சினாரிம்போ கூறியுள்ளார்.
முக்கியமாக நிலச்சரிவில் சிக்கிய 98 பேரில் குறைந்தது 53 பேர் மகுயிண்டனாவோவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இதில் 69 பேர் காயமடைந்தனர். மேலும் 63 பேர் காணாமல் போயுள்ளனர்.
அதேநேரம் பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் நாடு முழுவதும் நால்கே புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 9,12,000க்கும் மேற்பட்ட மக்கள் முகாம்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். பலத்த காற்று மற்றும் கனமழையால் 4,100க்கும் மேற்பட்ட வீடுகள், 40,180 ஏக்கர் விவசாய நிலங்கள் ஆகியவை சேதமடந்துள்ளன.
இந்த புயல் நேற்று (அக் 30) தென் சீனக் கடலின் வழியாக கடந்து சென்றதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 1976ஆம் ஆண்டில் மோரோ வளைகுடாவில் 8.1 ரிக்டர் அளவில் தாக்கிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குஜராத் கேபிள் பாலம் விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 132 ஆக உயர்வு