கொலம்பியா: கடந்த மே 1ஆம் தேதி செஸ்னா ஒற்றை இன்ஜின் ப்ரொப்பல்லர் என்ற சிறிய ரக விமானம் 4 குழந்தைகள் மற்றும் அவர்களின் தாய் உள்பட ஏழு பேரை ஏற்றிக் கொண்டு அமேசான் வனப்பகுதி வழியாக பயணித்துள்ளது. அப்போது திடீரென விமானத்தில் கோளாறு ஏற்பட்டதாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, அமேசான் காட்டுக்குள் அந்த விமானம் கிழே விழுந்து நொறுங்கியது. இதனைத் தொடர்ந்து, அதில் பயணித்தவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கிய கொலம்பிய அரசு, சம்பவ இடத்திற்கு ராணுவத்தை அனுப்பியது. அந்த நேரத்தில் தீவிர தேடுதலில் இறங்கிய அந்நாட்டு ராணுவம், மே 16ஆம் தேதி அமேசான் வனப்பகுதியில் நொறுங்கி கிடந்த விமானத்தை கண்டுபிடித்தது.
அப்போது, அந்த விமானத்தில் பயணித்த பெண் பயணி, விமான ஓட்டுநர் உள்பட 3 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். ஆனால், அதே விமானத்தில் பயணித்த ஒரு கை குழந்தை உள்பட 4 குழந்தைகளும் சம்பவம் நடந்த இடத்தில் இல்லை என ராணுவத்தால் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, குழந்தைகள் உயிருடன் இருக்க வாய்ப்பு உள்ளதாக ராணுவமும், அந்நாட்டு அதிபரும் தகவல் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து குழந்தைகளை மீட்கும் பணியில் தீவிரமாக இறங்கியது, கொலம்பிய அரசு. அதற்காக 150 ராணுவ வீரர்கள் கொண்ட குழுவை அமேசான் வனப்பகுதிக்கு அந்நாட்டு அரசு அனுப்பியது. உடன் மோப்ப நாய்கள், குழந்தைகளுக்கான உணவு, மருந்து, உள்ளிட்ட அனைத்தும் ஹெலிகாப்டர் மூலம் எடுத்துச் செல்லப்பட்டன.
அவர்களுடன் அந்நாட்டு பழங்குடியின மக்களும் குழுக்களாக பிரிந்து குழந்தைகளைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த தேடுதல் வேட்டையை மூடுக்கி விட்ட ராணுவம், ஒலி பெருக்கி மூலம் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதற்கான அறிவுறுத்தல்களை ஹெலிகாப்டர்கள் மூலம் அறிவித்து வந்தது. காடுகளுக்கு இடையே ஆங்காங்கே உணவு பொருட்களையும் வீசப்பட்டது.
அடர்ந்த வனப்பகுதி என்பதால் குழந்தைகள் எங்கே இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிப்பதில் ராணுவ வீரர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. அதேநேரம், ராணுவத்தினர் குழுக்களாகப் பிரிந்து குழந்தைகளை தேடும் பழங்குடியின மக்களையும் வழிநடத்தி உள்ளனர். இப்படி 39 நாட்கள் கடந்த நிலையில் 40வது நாள் ராணுவத்தின் மோப்ப நாய் குழந்தைகளை நெருங்கியதாக ராணுவ அதிகாரி கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து கொலம்பிய ராணுவமும், பழங்குடி குழுவினரும் குழந்தைகளை கண்டுபிடித்துள்ளனர். உணவு இல்லாமல் 40 நாட்கள் குழந்தைகள் வனப்பகுதியில் தாக்குப்பிடித்து இருந்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ள நிலையில், குழந்தைகள் மீட்கப்பட்டதை கொலம்பிய நாடே கோலாகலமாக கொண்டாடி வருகிறது.
இது குறித்து பேசியுள்ள அந்நாட்டு அதிபர் குஸ்டாவோ பெட்ரோ, குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது எனவும், காட்டின் குழந்தைகள் இனி கொலம்பியாவின் குழந்தைகள் எனவும் கூறியுள்ளார். மேலும், 40 நாட்கள் குழந்தைகள் எப்படி காட்டிற்குள் இருந்தார்கள் என்பதை உலகமே வியப்புடன் பார்த்துக் கொண்டு இருக்கும் நிலையில், இது கொலம்பியாவிற்கு மகிழ்ச்சிகரமான நாள் எனவும் குறிப்பிட்டுள்ளார்".
இது குறித்து அந்நாட்டு ராணுவ அதிகாரி ஒருவர், குழந்தைகள் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், காட்டிற்குள் வாழ்ந்த அனுபவம் இருப்பதாலும் ஓரளவு தங்களை பாதுகாத்துக் கொள்ள அவர்களால் முடிந்துள்ளது என கூறியுள்ளார். இந்த நிலையில் மீட்கப்பட்ட லெஸ்லி ஜேகோபோம்பேர் (13), சோலோனி ஜேகோபோம்பேர் முகுடி (9), டியன் ரனோக் முகுடி (4) மற்றும் கைக்குழந்தை ஆகியோருடன் அந்நாட்டு ராணுவத்தினர் காட்டிற்குள் வைத்து புகைப்படம் எடுத்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: "ட்விட்டர் 2.O"-வை உறுவாக்குவோம்: டிவிட்டரின் புதிய சிஇஓ-வாக பொறுப்பேற்றுள்ள லிண்டா யாக்காரினோ அழைப்பு!