லண்டன்: இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கா சென்றிருந்தார். கடந்த 31ஆம் தேதி, இந்தியா - அமெரிக்கா இடையே வளர்ந்து வரும் தொழில்நுட்பம் தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்டார். அமெரிக்க முப்படைகளின் தலைமைத் தளபதி மார்க் மில்லேவை, அஜித் தோவல் சந்தித்துப் பேசினார். அதைத்தொடர்ந்து அஜித்தோவல் பிரிட்டன் சென்றார்.
இந்த நிலையில், இன்று(பிப்.5) லண்டனில் உள்ள பிரிட்டன் அமைச்சரவை அலுவலகத்தில் பிரிட்டன் பாதுகாப்பு ஆலோசகர் டிம் பாரோவை, அஜித் தோவல் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். அதில், இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இந்தச் சந்திப்பில் சிறப்பு விருந்தினராக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கலந்து கொண்டார். அப்போது பேசிய ரிஷி சுனக், வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இருநாடுகள் இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்த தயாராக இருப்பதாக உறுதி அளித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரிட்டன் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த பிரதமர் ரிஷி சுனக், இந்து மத தர்மம் குறித்து பேசியிருந்த நிலையில், இன்று இந்திய - பிரிட்டன் பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டத்தில் ரிஷி சுனக் உரையாற்றியுள்ளார்.