இங்கிலாந்து: இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பார்ட்டிகேட் விவகாரம் காரணமாக தனது எம்பி பதவியை ராஜினாமா செய்வதாக போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட போரிஸ் ஜான்சன் அமோக வெற்றி பெற்று அந்நாட்டின் பிரதமர் ஆனார். அந்த காலகட்டத்தில்தான் உலக நாடுகள் முழுவதும் கரோனா பெறுந்தொற்று தீயாக பரவியது. இந்த சூழலில், கரோனாத் தொற்றை கட்டுப்படுத்த உலக நாடுகள் ஊரடங்கை அறிவித்திருந்தபோது, போரிஸ் ஜான்சன் தனது பிறந்தநாளை நண்பர்கள், கட்சி பிரமுகர்கள் என கூட்டத்தை கூட்டி மிக பிரமாண்டமாக நடத்தினார்.
இதனால் பெரும் சர்ச்சைகளும், குற்றச்சாட்டுகளும் அவர் மீது முன் வைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் தான் செய்த குற்றத்திற்காக போரிஸ் ஜான்சன் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார். ஆனால், இதை தான் வேண்டுமென்றே செய்யவில்லை எனவும் விளக்கம் அளித்தார்.
இதனையடுத்து, அமைதியாக அடங்கி விடும் என நினைத்த இந்த விஷயம் மீண்டும் மீண்டும் பூதாகரமாக வெடிக்கத் தொடங்கியது. அந்த வகையில் விதிகளை மீறிய குற்றத்திற்காக அந்நாட்டு காவல் துறை அவர் மீது வழக்குப் பதிவு செய்து அபராதமும் விதித்தது. இதனால் விதிகளை மீறிய குற்றத்திற்காக முதன் முதலில் அபராதம் விதிக்கப்பட்ட பிரதமர் என்ற நிலையை போரிஸ் ஜான்சன் அடைந்தார்.
இந்த நிலையில், அவர் செய்த இந்த குற்றத்திற்காக சிறப்புக் குழு ஒன்று அமைத்து விசாரணை நடத்த அந்த நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன் அடிப்படையில், அந்தக் குழு நடத்திய விசாரணையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போரிஸ் ஜான்சன் தவறாக வழி நடத்தியுள்ளார் எனவும், இதனால் அவர் தற்காலிகமாக பதவி விலக வேண்டும் எனவும் கூறியிருந்தது. அதன் அடிப்படையில்தான் போரிஸ் ஜான்சன் தற்போது பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதனிடையே, இந்த விவகாரம் குறித்து நீண்ட அறிக்கை ஒன்றை போரிஸ் ஜான்சன் வெளியிட்டுள்ளார். அதில், விசாரணைக் குழு ஆரம்பத்தில் இருந்தே தன்னை குற்றவாளியாக சித்தரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாக போரிஸ் ஜான்சன் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், அந்த விசாரணைக் குழுவில் அரசாங்கம் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் பலர் உள்ள நிலையில், அவர்கள் தன்னை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்ற முயற்சிப்பதாகவும் போரிஸ் ஜான்சன் விமர்சித்துள்ளார். ஆனால், ஒருபோதும் தனது ரோலர் கோஸ்டர் அரசியல் வாழ்கை முடிவுக்கு வராது என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
மேலும், தனது இந்த ராஜினாமா தற்காலிகமானதாக இருந்தாலும், நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறுவது வருத்தம் அளிப்பதாக போரிஸ் ஜான்சன் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: Biporjoy Update: 'பிப்பர்ஜாய்' புயல் அப்டேட்.. 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!