நியூயார்க்: டெலாவர் மாகாணத்தில் உள்ள தனது கடற்கரை இல்லத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மனைவி ஜில் பைடனுடன் அவரது வாரயிறுதி நாள்களை கழித்துவருகிறார். பைடன் தம்பதியினர் தங்களின் 45ஆவது திருமண நாளை கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 17) அன்று கொண்டாடினர்.
இந்நிலையில், அதிபர் பைடன் அவரின் கடற்கரை வீட்டிலிருந்து அருகே உள்ள கேப் ஹென்லோபன் ஸ்டேட் பூங்கா வரை தனது மனைவியுடன் நேற்று (ஜூன் 18) சைக்கிளிங் சென்றார். அங்கு பூங்காவில் நின்றுகொண்டிருந்த மக்களிடம் உரையாடுவதற்காக பைடன் சைக்கிளை நிறுத்தி இறங்க முயன்றபோது, அவரின் வலதுப்புறத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
விழுந்த பின்னர், உடனடியாக எழுந்த பைடன் தனக்கு ஒன்றும் ஆகவில்லை என்றும் நலமாக இருப்பதாகவும் தெரிவித்தார். கால் விரல்கள் சைக்கிள் பெடலில் சிக்கிக்கொண்டதால் நிலை தடுமாறியதாகவும் தெரிவித்தார். மேலும், கீழே விழுந்த அவருக்கு எந்தவித மருத்துவ சிகிச்சையும் தேவைப்படவில்லை எனவும் வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. அவர் சைக்கிளில் இருந்த கீழே விழுந்த காணொலி தற்போது வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: ஜாலியன்வாலாபாக் படுகொலைக்காக வருந்துகிறோம் - பிரிட்டிஷ் அதிகாரி வருத்தம்