- " class="align-text-top noRightClick twitterSection" data="">
வாஷிங்டன்: OceanGate என்ற சுற்றுலா நிறுவனத்தின் நீர்மூழ்கி கப்பலில் அந்நிறுவனத்தின் உரிமையாளர் உள்ளிட்ட 5 பேர் டைட்டானிக் கப்பலின் சிதிலமடைந்த பாகங்களைக் காண கடந்த 18ஆம் தேதி நீர்மூழ்கி பயணம் மேற்கொண்ட நிலையில் இந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.
வரலாற்றில் மறக்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்திய சம்பவங்களில் டைட்டானிக் கப்பல் நீரில் மூழ்கி விபத்துக்குள்ளான சம்பவமும் ஒன்று. பனிப்பாறையில் மோதி நீரில் மூழ்கிய அந்த கப்பலில் சுமார் 1500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் இந்த விபத்து நடந்து 110 ஆண்டுகள் கடந்து விட்டது.
டைட்டானிக் திரைப்படமும் மவுசை ஏற்றிய நிலையில், ஆழ்கடலில் கிடக்கும் டைடானிக் கப்பலை நேரில் சென்று பார்க்கும் ஆர்வம் பலருக்கும் இருக்கு. மக்களின் ஆர்வம் வணிகமா மாறுவது இயல்பு தானே, OceanGate Expeditions என்ற நிறுவனம் The Titan submersible என்ற நீர்மூழ்கி மூலமாக இதனை சுற்றுலாவாக மாற்றியது.
கடந்த 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் 46 பேர் வரை டைட்டானிக் சுற்றுப் பயணத்தை ஓசேன்கேட் நிறுவனம் மூலம் வெற்றிகரமாக மேற்கொண்டனர். இந்நிலையில், அதே சுற்றுலா நிறுவனத்தின் நீர்மூழ்கி கப்பலில் அந்நிறுவனத்தின் உரிமையாளர் உள்ளிட்ட 5 பேர் டைட்டானிக் கப்பலின் சிதிலமடைந்த பாகங்களைக் காண கடந்த 18ஆம் தேதி பயணம் மேற்கொண்டனர்.
ஆழ்கடலுக்கு புறப்பட்ட 2 மணி நேரத்தில் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து சிக்னல் துண்டிக்கப்பட்டது. எலான் மஸ்க்கின் இணைய சேவை நிறுவனமான ஸ்டார்லிங்க்கின் இணையத்தில் இயங்கிக் கொண்டு இருந்த நீர்மூழ்கிக் கப்பல் திடீரென காணாமல் போனது. காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலை தேடி அமெரிக்க கடலோர காவல் படை, கனடா ராணுவ விமானங்கள், பிரான்ஸ் கடற்படை கப்பல்கள் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டன.
ஒவ்வொரு பயணத்தின் போதும் நீர்மூழ்கிக் கப்பலில் அதிகபட்சமாக 96 மணி நேரத்திற்கு மட்டுமே ஆக்சிஜன் கையிருப்பு இருக்கும். அவசரகால தேவைகளுக்காக நான்கு நாட்களுக்கு பயன்படுத்தப்படும் வகையில் பதப்படுத்தப்பட்ட உணவுகள் நீர்மூழ்கிக் கப்பலில் சேமிக்கப்பட்டிருக்கும். நீர்மூழ்கிக் கப்பலில் ஜூன் 22-ஆம் தேதி அதாவது நேற்றுடன் ஆக்சிஜன் தீர்ந்து விடும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், மாயமானவர்களை தேடும் இறுதிக் கட்ட முயற்சியில் பாதுகாப்பு படை வீரர்கள் முழு வீச்சில் ஈடுபட்டனர்.
கடைசி நாளில் கூடுதல் கப்பல்கள், ரோந்து படகுகள், தொலைதூர வழிகாட்டு ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டன. கடலின் உள்ளே 4 கிலோ மீட்டர் ஆழத்தில் கடும் இருள் சூழ்ந்த ஆழ்கடலில், நடைபெறும் மீட்புப்பணி சவாலானதுதான். கடைசியாக சிக்னல் துண்டிக்கப்பட்ட இடத்தை மையமாகக் கொண்டு மீட்பு பணி நடைபெற்றது.
அமெரிக்காவின் கனக்டிக்கெட் மாகாணத்தில் இருந்து 12 ஆயிரத்து 200 அடி தூரம் கடல் பரப்பில் தேடுதல் பணி நடைபெற்று முடிந்த நிலையில், நீர்மூழ்கிக் கப்பலை இதுவரை கண்டறிய முடியவில்லை என அமெரிக்க கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆக்சிஜன் தீர்ந்து போவது மட்டுமே ஒரே பிரச்னை அல்ல, என கூறிய மீட்புப்படையினர், நீர்மூழ்கியில் உள்ள மின்சப்ளை சாதனங்கள் பழுதடைவதும் , பேட்டரிகள் செயலிழப்பதும் அபாய விளைவை ஏற்படுத்தும் என ஏற்கனவே கூறியிருந்தனர்.
இந்த நீர்மூழ்கி கப்பலில், தொழிலதிபர்களான 58 வயது ஹமிஷ் ஹார்டிங், 48 வயதான ஷாஜதா தாவூத், அவரது 19 வயதான மகன் சுலேமான், 77 வயதான பால்-ஹென்றி மற்றும் 66 வயதான OceanGate இன் தலைமை நிர்வாகி ஸ்டாக்டன் ரஷ்நர் ஜோலெட் ஆகியோர் பயணித்துள்ளனர். நீர்மூழ்கி கப்பல் சூரிய ஒளி செல்லாத பகுதியில் மூழ்கி இருக்கும் நிலையில், பனிப்பாறைகளின் அதீத குளிர் காரணமாக உடலில் ரத்தம் உறையும் நிலை ஏற்படவும் வாய்ப்பிருப்பதாக எச்சரித்திருந்தனர். இந்நிலையில் 4 நாள் தேடுதல் பணி முடிவுற்றும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என மீட்பு படை அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் டைட்டானிக் ஆழ்கடல் பயணம் மேற்கொண்ட 5 கோடீஸ்வரர்களும் உயிரிழந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதேநேரம், இந்த தேடுதல் பணியின்போது கடலின் அடியில் டைட்டானிக் கப்பலின் சிதிலமடைந்த பாகங்களுக்கு இடையே நீர்மூழ்கி கப்பலின் உடைந்த பாகங்கள் சில கிடைத்துள்ளதாக அமெரிக்க மீட்பு படை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதன் மூலம் நீர் மூழ்கி கப்பல், கடலின் அடியில் பாறையில் மோதி வெடித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் தற்போது வரை எதையும் உறுதி செய்ய முடியாத நிலையில் இறந்தவர்களின் உடல்களையாவது மீட்க முடியுமா என்று கேட்டால் அதுவும் சாத்தியம் அற்றது எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் 5 கோடீஸ்வரர்களின் டைட்டானிக் சுற்றுலா கடலோடு கடலாக முடிந்து விட்ட நிலையில் அவர்களின் குடும்பங்களுக்கு மீட்பு படை வீரர்கள், Ocean Gate நிறுவன உழியர்கள், உலக தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள OceanGate தலைமை நிர்வாகம் தங்களின் தலைமை நிர்வாகி ஸ்டாக்டன் ரஷ்நர் ஜோலெட் உள்ளிட்ட 5 பேர் இறந்து விட்டார்கள் என்பதை இப்போது ஏற்றுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர். மேலும், கடல் மற்றும் சுற்று சூழல் மீது அதீத ஆர்வம் கொண்ட 5 பேரை இழந்துள்ள நிலையில் அவர்களின் குடும்பத்தினருக்கு தங்களின் இரங்கலையும் குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: இந்திய விமானப் படைக்கு ஃபைட்டர் ஜெட் என்ஜின்... அமெரிக்க நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!