பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், ஆங்கிலேயர்களை எதிர்த்து நடந்த விடுதலைப் போராட்டத்தை நசுக்க 1919ஆம் ஆண்டு ரௌலட் சட்டம் கொணடு வரப்பட்டது. இதை எதிர்க்கும் வகையில், அமிர்தசரஸில் உள்ள ஜாலியன் வாலாபாக்கில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் ஒன்று கூடி, ஆங்கிலேயருக்கு எதிராக சுதந்திரப் போராட்டப் பாடல்களை பாடிக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு தன் படையுடன் வந்த ஆங்கிலேய அதிகாரியான ஜெனரல் டயர், கூட்டத்தினர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார். இதில் 1600க்கும் மேற்பட்டோர் இறந்தனர்; ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பிரிட்டிஷ் வரலாற்றில் அவமானமாக இடம்பெற்ற இந்தச் சம்பவத்திற்கு அந்நாட்டு அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும் என சமீப ஆண்டுகளாகக் குரல்கள் எழுந்து வந்தன.
ஜாலியன் வாலாபாக் சம்பவத்திற்கு பிரிட்டிஷ் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என இந்திய வம்சாவளி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். ஆனால் பிரிட்டிஷ் அரசியல்வாதிகளில் ஒரு பிரிவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நடந்து முடிந்த சம்பவத்துக்கு பிரிட்டிஷ் அரசு மன்னிப்பு கோருவது சரியாக இருக்காது என தெரிவித்தனர்.
வரும் 13ம் தேதியுடன் இந்தப் படுகொலை நடந்து 100 ஆண்டுகள் நிறைவுபெற உள்ளன. இந்நிலையில் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்காக ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக் கொள்வதாக பிரிட்டிஷ் பிரதமர் தெரஸா மே அறிவித்தார். இதுபோலவே நாடாளுமன்றத்தில் பேசிய பிரிட்டிஷ் எதிர்க்கட்சித் தலைவர் ஜெர்மி கரியோனும் முழு மனதுடன் வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்வதாகக் தெரிவித்தார்.