Latest International News: முழுக்க முழுக்க கச்சா எண்ணெய்யை மட்டுமே நம்பி சவுதி அரேபியாவின் பொருளாதாரம் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துவருவது, காற்றுமாசை குறைப்பதற்கு பல்வேறு நாடுகளும் மாற்று எரிபொருள் நோக்கி நகர்வது போன்றவை சௌதியின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச் செய்கிறது.
சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் 'விஷன் 2030' திட்டத்தின்படி கச்சா எண்ணெய்யைத் தாண்டி சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு தளங்களில் பொருளாதாரத்தை விரிவு செய்ய அந்நாட்டு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன்படி முதன்முறையாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 49 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்குச் சுற்றுலா விசா வழங்க சவுதி அரசு முடிவுசெய்துள்ளது.
ஆனாலும், இஸ்லாமிய கோட்பாடுகளைக் கடுமையாகப் பின்பற்றும் சவுதி அரசு, தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இறுகிய ஆடை அணிவது, பொது இடங்களில் முத்தமிடுவது உள்ளிட்ட 19 செயல்களை அபராதம் செலுத்த வேண்டிய குற்றங்களாகப் பட்டியலிட்டுள்ளது சவுதி அரசாங்கம். ஆனால், அபராதத் தொகை பற்றிய விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், சுற்றுலா வரும் பெண்கள் புர்கா அணியக் கட்டாயமில்லை என்றாலும் தோள்பட்டைகளையும் கால்களையும் மூடும்படி உடையணிய வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சவுதி நாட்டுப் பெண்கள் புர்கா அணிய வேண்டிய வழக்கம் தொடரும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே: 'கஷோகியின் கொலை என் கண்காணிப்பில்தான் நடந்தது!' - சவுதி இளவரசர் ஒப்புதல் வாக்குமூலம்!