புனித ரமலான் மாதத்தை ஒட்டி இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் உள்ள புனிதத்தலத்தில் வழிபட பாலஸ்தீனியர்கள் குழுமியிருந்த போது, இஸ்ரேல் காவல்துறைக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையில் மோதல் வெடித்தது. அதைத் தொடர்ந்து இரு நாட்டு எல்லையான காஸாவில் இரண்டு நாள்களாக கடும் மோதல் நிலவி வருகிறது.
இரண்டு தரப்பும் மாறிமாறி வான்வெளித் தாக்குதல் நடத்தி வருவதால் இஸ்ரேல்-பாலஸ்தீன் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளது. இதுவரை பாலஸ்தீனின் ஹமாஸ் இயக்கம் 1,800 ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இஸ்ரேல் 600க்கும் மேற்பட்ட வான்வெளித் தாக்குதலை நடத்தியுள்ளது.
காஸா எல்லைப் பகுதியில் மட்டும் இதுவரை 119 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 830 பேர் காயமடைந்துள்ளனர் என்று காஸா சுகாதாரத்துறை தகவல் தெரிவிக்கிறது. இந்தத் தொடர் தாக்குதல்களைத் தாங்கிக்கொள்ள முடியாமல் காஸா பகுதி மக்கள் அண்டை பகுதிகளுக்கு குடிபெயரத் தொடங்கியுள்ளனர்.
பலரும் தங்கள் வீடு, உடைமைகள் விட்டுவிட்டு குழந்தைகளுடன் ஊரை காலி செய்யும் அவலம் நிகழத்தொடங்கியுள்ளது. இந்த மோதல் போக்கை உடனடியாக நிறுத்தக் கோரி இரு தரப்புக்கு ஐ.நா. சபை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதையும் படிங்க: மத விழாக்கள், அரசியல் கூட்டங்களே கரோனா தீவிரமடைய காரணம் - உலக சுகாதார அமைப்பு