மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல்-பாஸ்தீன் இடையே நீண்ட காலமாக பிரச்னை நிலவிவருகிறது. இதனை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மத்திய கிழக்கு திட்டத்தை கடந்த மாதம் அறிவித்தார்.
இந்த திட்டத்தின் படி, இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேம் அறிவிக்கப்படும். அதே சமயம் 1967ஆம் ஆண்டு இஸ்ரேல் ஆக்கிரமித்த கிழக்கு ஜெருசலேம், பாலஸ்தீன தலைநகராக அறிவிக்கப்படும். பாலஸ்தீனம் சுதந்திர நாடாக ஏற்றுக்கொள்ளப்படும் திட்டத்தின் கீழ், பாலஸ்தீனத்திற்கு ஒதுக்கப்பட்ட புதிய பகுதிகளில் நான்கு ஆண்டுகள் வரை இஸ்ரேலியர்கள் (யூதர்கள்) யாரும் குடியேறக் கூடாது.
ஆனால், இந்தத் திட்டம் இஸ்ரேலுக்கு சாதகமாக இருப்பதாகக் கூறி பாலஸ்தீன் உள்ளிட்ட நாடுகள் நிராகரித்துள்ளன. இந்நிலையில், சர்ச்சைக்குரிய இந்த திட்டத்தை எதிர்த்து பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியில் அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, ரமல்லா நகரை ஒட்டியுள்ள பெய்ட் எல் என்னும் யூத குடியிருப்பை நோக்கி பேரணி மேற்கொண்ட போராட்டக்காரர்களை இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்த முயன்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், இஸ்ரேல் பாதுகாப்புப் படையினரை நோக்கி கற்களை வீசினர். பதிலுக்கு இஸ்ரேல் படையினரும் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைகுண்டுகள் வீசினர். இதனால் அங்கு வன்முறை வெடித்தது.
ட்ரம்ப்பின் மத்திய கிழக்கு திட்டம் குறித்து பாலஸ்தீன அதிபர் முகமது அபால், ஐநாவில் உரையாற்ற உள்ள நிலையில், வன்முறை சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதையும் படிங்க : மத்திய கிழக்கு திட்டம்: பாலஸ்தீனம், இஸ்ரேல் புதிய வரைபடம் வெளியீடு