குவைத்: குவைத் நாட்டு நாடாளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் (டிசம்பர் 5) அமைதியான முறையில் நடைபெற்றது. அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உள்ள 50 இடங்களுக்கான இத்தேர்தலில் 326 பேர் போட்டியிட்டனர். இதில் 29 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவர். அன்றைய தினம் காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 8 மணி வரை நடைபெற்றது.
இதனையடுத்து, தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. இத்தேர்தலில் 5,67,694 பேர் தங்களது வாக்கினை செலுத்தியிருப்பதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் வெற்றி பெறுபவர்கள் நான்கு ஆண்டுகள்வரை எம்.பி பதவியில் இருப்பர்.
வாக்கு எண்ணிக்கையின் முடிவில், மொத்தமுள்ள 50 இடங்களில், 31 இடங்களில் புதிதாக போட்டியிட்ட வேட்பாளர்களும், 19 பேர் முன்பு எம்.பி.க்களாக இருந்தவர்களும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், போட்டியிட்ட 29 பெண் வேட்பாளர்களில் ஒருவரும் வெற்றிப்பெறவில்லை.
அந்நாட்டு எதிர்க்கட்சியினர் பெரும்பான்மையான இடங்களை பெற்று வெற்றி பெற்றதையடுத்து, அந்நாட்டு பிரதமர் ஷேக் சபா கலீத் அல் ஹமத் அல் சபா, தனது ராஜினாமா கடிதத்தை குவைத் எமிர் ஷேக் நவாஸ் அல் அகமது அல் ஜபெர் அல் சபாவிடம் சமர்ப்பித்தார். இதனை அவர் ஏற்றுக்கொண்டார்.
தேர்தல் குறித்து பேசிய நாடாளுமன்ற முன்னாள் சபாநயகர் மர்சூக் அல் கனிம், "தேர்தலில் தங்களது கடமையை சிறப்பாகவும், நேர்மையாகவும் செய்து முடித்த குவைத் நாட்டு மக்களை எண்ணி எனக்கு பெருமையாக இருக்கிறது" எனத் தெரிவித்தார்.
அதேபோல் அந்நாட்டின் எமிர் (அரச குடும்பம்) கூறுகையில், " தேர்தல் சுந்திரமாகவும், வெளிப்படைத்தன்மையுடன் நடக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்து செயல்பட்டோம்" என்றார். இதையடுத்து, வரும் 15ஆம் தேதி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பதவியேற்க வருமாறு அந்நாட்டு எதிர்க்கட்சியினருக்கு, எமிர் அழைப்புவிடுத்துள்ளார்.
இதையும் படிங்க: தேர்தல் புறக்கணிக்கப்பட்டாலும் நாங்களே வெற்றி - மதுரோ கூட்டணி