டெல்லி: இஸ்ரேல் பாலஸ்தீனிய தரப்பு நிபந்தனையற்ற போர் நிறுத்தத்தை அறிவுறுத்தியுள்ளது. இந்தப் போர் நிறுத்தம் பாலஸ்தீனியர்களுக்கு கிடைத்த வெற்றி என ஹமாஸ் இயக்கம் கூறிவரும் நிலையில், காசாவின் அனைத்து நோக்கங்களில் இஸ்ரேஸ் வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவில் பாதுகாப்பு அமைச்சகத்தில் பேசிய அவர், "இஸ்ரேல் இந்த மோதலைத் தொடங்கவில்லை. மாறாக, பயங்கரவாத இயக்கமான ஹமாஸ் எங்கள் மீது 4ஆயிரம் ஏவுகணைகளை எங்கள் தலைநகரின் மீதும், எங்கள் நகரங்களின் மீது ஏவி மோதலைத் தொடங்கியது. எந்த ஒருநாடும் இதுபோன்ற தாக்குதலைத் தாங்கிக்கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்காது. நாங்கள் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் மறைந்துகொண்டுள்ள பயங்கரவாதிகளை எதிர்த்து சண்டையிட்டோம்" எனத் தெரிவித்தார்.
ஹமாஸ் தனது மக்களை கேடயமாக பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டிய அவர், "நாங்கள் எங்கள் பலத்தை பயன்படுத்தி இஸ்ரேலிய குடிமக்களின் உயிர்களையும், அதேநேரம் பாலஸ்தீனியர்களின் உயிர்களையும் காக்கவும் சண்டையிட்டோம். ஒவ்வொரு உயிரிழப்புக்கும் நான் வருந்துகிறேன். அதேநேரம் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். எந்த நாட்டு ராணுவமும் இதுபோன்ற சூழ்நிலையில் எங்கள் நாட்டு ராணுவத்தைப் போன்ற ஒழுக்கத்தைப் பின்பற்றியிருக்காது" என்றார்.
மேலும், "இந்தமோதல் தொடங்கிய நாள் முதல் தங்களுக்கு ஆதரவாக இருந்த அமெரிக்கப் பிரதமர் ஜோ பைடனுக்கும், மக்களின் உயிர்களை காப்பாற்றும் வகையில் ஜனநாயக முறைப்படி செயல்படும் நாட்டுக்கும், உயிரிழப்புகளை மிகைப்படுத்தும் பயங்கரவாத இயக்கத்திற்குமான வித்தியாசத்தை புரிந்துகொண்டு ஆதரவளித்த சர்வதேச சமூகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.
மோதல் தொடங்கிய நாளில் இருந்து சர்வதேச சமூகம் உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தி வந்தது. அண்மை நாட்களில் இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகுவுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆறு முறை பேசி போரை நிறுத்துமாறு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா. மன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில், இருதரப்பினரும் தாக்குதல்களை நிறுத்தவேண்டும் என இந்தியா வலியுறுத்தியிருந்தது.
காஸா சுகாதாரத்துறை அலுவலர்கள், இந்த மோதலில் 65 சிறுவர்கள் உட்பட 232பேர் கொல்லப்பட்டதாகவும், 1,900க்கும் மேற்பட்டோர் காயமுற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள். 160 ஹமாஸ் போராளிகளை தாங்கள் கொன்றுள்ளதாக இஸ்ரேல் தரப்பு கூறியுள்ளது.
இதையும் படிங்க: இஸ்ரேலிய, பாலஸ்தீனிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர்