இஸ்ரேல் நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அந்நாட்டு பிரதமர் நெதன்யாகுவின் லிக்குட் கட்சி நூலிழையில் வெற்றிபெற்றது.
ஆனால், ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பாண்மையை பிரதமர் நதென்யாகு நிரூபிக்க முடியாமல் போனதால் ஆட்சி கலைக்கப்பட்டு மீண்டும் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இஸ்ரேலில் நேற்று செவ்வாய்கிழமை (செப்.17) பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்றுவரும்வேளையில், தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.
அதில், நெதன்யாகுவின் லிக்குட் கட்சி பின்னடைவைச் சந்தித்துள்ளது. முன்னாள் ராணுவ தளபதி பென்னி கன்ட்ஸ் தலைமையிலான (வைட் அண்ட் ப்ளூ) எதிர்க்கட்சி, லிக்குடை விட ஒரிரு இடங்கள் அதிகம் பெறும் என கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன.
120 இருக்கைகள் கொண்ட இஸ்ரேல் நாட்டின் 'கென்னசட்' நாடாளுமன்றத்துக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுகிறது.
இஸ்ரேல் பிரதமராக மிக நீண்ட காலம் பதவி வகித்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ள பென்ஜமின் நெதன்யாகு, ஐந்தாவது முறையாக தன் பிரதமர் பதவியை தக்கவைக்க முயற்சி வருகிறார்.