சிரியாவின் வடக்குப் பகுதியான ரக்கா மாகாணத்தில் (Raqqa province) அய்ன் இஷா (Ayn Issa) பகுதியில் குர்து படையினருக்கும் துருக்கி ஆதரவாளர்களும் இடையே சண்டை தீவிரமாக நடந்துவருகிறது.
இந்தச் சண்டையில் நடத்தப்பட்ட வான்வெளித் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை போர் கண்காணிப்புக் குழுவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் (அக்டோபர்) 9ஆம் தேதி, குர்து படையினருக்கும் துருக்கி ஆதரவு படையினருக்கும் இடையே சண்டை வலுத்தது. இந்தத் தாக்குதல்களில் இதுவரை 305 போர் வீரர்கள், 353 துருக்கி ஆதரவாளர்கள், சிரியா படையைச் சேர்ந்த 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தப் போரை நிறுத்தும்வகையில், ரஷ்ய மத்தியஸ்தத்தின் கீழ் அக்டோபர் 9ஆம் தேதி முதல் ஒரு சில ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இது சில பகுதிகளில் சண்டை நிறுத்தப்படுவதற்கு உதவியது. எனினும் சிரிய-துருக்கி எல்லையில் குர்து வசம் உள்ள பகுதிகளுக்கு சிரிய துருப்புகள் நுழைவதற்கும் வழிவகுத்தது.
துருக்கி எல்லைக்கு அருகிலுள்ள சில பகுதிகளிலிருந்து குர்து போராளிகள் விலகவில்லை என்று துருக்கி சமீபத்தில் குற்றஞ்சாட்டியது. இது குர்து போராளிகளுக்கும் துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான சண்டையை மீண்டும் புதுப்பித்துவிட்டது.
சிரியாவில் பயங்கரவாதிகளை அழித்துவிட்டதாகப் போரிலிருந்து அமெரிக்கா விலகிய நிலையில், குர்து படைகளுக்கு எதிராக துருக்கி போரை நடத்திவருகிறது. இது குறித்து ஐ.நா. கவலை தெரிவித்திருந்தது. இதற்கு விளக்கம் அளித்த துருக்கி, தங்கள் நாட்டு எல்லைகளின் அருகே, பயங்கரவாதிகள் உருவாக தாங்கள் விரும்பவில்லை எனக் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க: துருக்கி - ரஷ்ய ராணுவ வாகனங்கள் மீது குர்து இன மக்கள் கல்வீச்சு!