உலக நாடுகளை மீண்டும் அச்சத்திற்குள்ளாக்கியுள்ள புதுவகை கோவிட்-19 தொற்றுக்கு உலக சுகாதார அமைப்பு ஒமிக்ரான் எனப் பெயரிட்டுள்ளது.
இந்த புதுவகை உருமாறிய தொற்று முதன்முதலாக தெற்கு ஆப்ரிக்கா நாடுகளில் தென்பட்டுள்ளன. இந்த புதுவகை தொற்று டெல்டா போன்ற தொற்றுக்களை விட அதிக வீரியத்துடன் இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உஷார் நிலையில் உலக நாடுகள்
COVID-19 variant- B.1.1.529 என்ற இந்த புதுவகை தொற்றில், மனித உடலில் பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்பைக் புரதம் (Spike Proteins) 30க்கும் மேல் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். போட்ஸ்வானா, தென்னாப்ரிக்கா, மலாவி போன்ற ஆப்ரிக்க நாடுகளில் இந்த புதுவகை தொற்று அதிகம் பதிவாகியுள்ளது.
கடந்த இரு நாள்களில் ஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம், இஸ்ரேல், தெற்காசிய நாடான ஹாங்காங் ஆகிய நாடுகளிலும் இத்தொற்று பதிவாகியுள்ளது. இதையடுத்து அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட சர்வதேச நாடுகள் ஆப்ரிக்கா நாடுகளுக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
அங்கிருந்து வரும் நபர்களை தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்த பல்வேறு நாடுகள் உத்தரவிட்டுள்ளன. இந்த உருமாறிய கோவிட் தொற்று குறித்த அச்சம் காரணமாக பங்குச்சந்தை, எண்ணெய் சந்தை ஆட்டம் கண்டுள்ளன.
பிரதமர் மோடி அவசர ஆலோசனை
பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை உயர் அலுவலர்களுடன் அவரச ஆலோசனை நடத்தினார். நாட்டின் கோவிட்-19 பரவல், தடுப்பூசி திட்டம் உள்ளிட்ட நிலவரங்கள் குறித்தும், புதிய வகை ஒமிக்ரான் தொற்று குறித்தும் பிரதமர் ஆலோசனை மேற்கொண்டார் எனக் கூறப்படுகிறது.
வரும் டிசம்பர் 15ஆம் தேதி முதல் நாட்டின் சர்வதேச விமானப் போக்குவரத்தை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது. இந்த சூழலில்தான் இந்த புது வகை வைரஸ் குறித்து அச்சம் உருவெடுத்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 120 கோடியே 24 லட்சத்து 93 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. 78 கோடியே 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஒரு டோஸ் தடுப்பூசியும், 43 கோடியே 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: karnataka super spreader: கர்நாடகாவில் ஒரே கல்லூரியைச் சேர்ந்த 182 பேருக்கு கரோனா