பல நாடுகளில் கரோனா வைரஸ் (தீநுண்மி) தாக்கம் அதிகளவில் இருப்பதால், அங்கிருந்து பிரிட்டனுக்கு வரும் பயணிகளுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்துவருகிறது. ஒரு சில நாடுகளை சிவப்புப் பட்டியலில் வைத்து, அந்நாட்டுப் பயணிகள் வருவதற்குத் தடைவிதித்துள்ளது.
இந்நிலையில், அந்த சிவப்புப் பட்டியலில் இந்தியாவையும் பிரிட்டன் தற்போது இணைத்துள்ளது. இந்த உத்தரவு, கரோனா பரவல் அதிகரிப்பால் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்தியப் பயணம் ரத்தானதைத் தொடர்ந்து வந்துள்ளது.
இந்தியாவைச் சிவப்பு பட்டியலில் இணைத்துள்ளதால் இங்கிலாந்து, அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்களைத் தவிர மற்றவர்கள் இந்தியாவிலிருந்து அந்நாட்டிற்குச் செல்ல அனுமதி கிடையாது.
இந்த உத்தரவானது, வரும் வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணிமுதல் அமலுக்கு வரவுள்ளது. இந்தச் சிவப்புப் பட்டியலில் ஏற்கனவே வங்க தேசம், பாகிஸ்தான் நாடுகள் உள்ளன.
முன்னதாக கடந்தாண்டு, பிரிட்டனில் உருமாறிய கரோனா தீநுண்மி கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அங்குச் செல்ல விமான சேவைகளுக்கு இந்தியா தடைவிதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கோவிட்டுக்கு எதிராகக் கடும் யுத்தம் செய்ய வேண்டிய நேரம் இது