உலகையே சூறையாடி வரும் கரோனா வைரஸ் பெருந்தொற்றால் சுற்றுலாத்துறை மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாகச் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழியும் ஐரோப்பிய நாடுகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
இதில் நெதர்லாந்து ஒன்றும் விதிவிலக்கு அல்ல. ஆம்ஸ்டர்டாம் நகரவாசிகளை எரிச்சலூட்டும் அளவுக்குக் கூச்சலும் கும்மாளமுமாய் வீதிகளில் வலம்வரும் சுற்றுலா பயணிகள் ஒருவரையும் தற்போது காணமுடிவதில்லை.
கடந்த ஆண்டில் மட்டும் இரண்டு கோடி சுற்றலாப் பயணிகளைக் கண்ட நெதர்லாந்தில் ஏற்பட்டுள்ள, இந்த திடீர் மாற்றம் அங்குள்ள சுற்றுலாத் துறையினரை திக்குமுக்காடச் செய்துள்ளது.
கரோனா பேரிடரைத் தொடர்ந்து, நெதர்லாந்து சுற்றுலாத் துறை என்னென்ன மாற்றங்களைக் காணப்போகிறது என்ற கேள்வி அவர்கள் மனதில் எழுந்துள்ளது.
கரோனா பேரிடர் நெதர்லாந்தைத் தாக்குவதற்கு முன்பே, கடந்த ஜனவரி மாதம் அந்நாட்டு சுற்றுலாத் துறையில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்தனர்.
ஆம்ஸ்டர்டாமில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க, அந்நகரைச் சுற்றியுள்ள சிறு சிறு நகரங்களுக்குச் சுற்றுலாப் பயணிகளைத் திசை திருப்பும் நோக்கில், 'ஆம்ஸ்டர்டாம் அண்ட் பார்ட்னர்ஸ்' என்ற தொண்டு நிறுவனம் புதிய மார்க்கெட்டிங் யுத்திகளை உருவாக்கி வருகிறது.
சுற்றுலாப் பயணிகள் விதிமீறலில் ஈடுபடுவதைத் தடுக்க அவர்கள் மீது அபராதம் விதிக்கும் நடைமுறையையும் ஆம்ஸ்டர்டாம் காவல் துறையினர் கொண்டு வந்துள்ளனர்.
நகரின் மத்தியில் உள்ள மூன்று முக்கியப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தங்க அனுமதிக்கக்கூடாது என அந்நகர அரசு புதிய தடை ஒன்றை விதித்துள்ளது. இந்த தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது.
சுற்றுலாப் பயணிகள் அதிக நாட்களால் ஆம்ஸ்டர்டாமில் தங்குவதைத் தடுக்க ஒரு இரவுக்கு நான்கு பேரை மட்டுமே தங்க வைக்க அனுமதிக்க வேண்டும் என வீட்டு உரிமையாளர்களுக்கு அரசு கெடுபிடி விதித்துள்ளது.
தற்போது அமலில் உள்ள கரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர், புதிய கட்டுப்பாடுகள், விதிகள், கெடுபிடிகளை எதிர்நோக்கி அந்நாட்டு சுற்றுலாத் துறையினர் காத்திருக்கின்றனர்.
எஸ்இஓ ஆம்ஸ்டர்டாம் எக்கனாமிக்ஸ் நடத்திய ஆய்வில், ஆம்ஸ்டர்டாம் சுற்றுலாத் துறை 2.7 பில்லியன் யூரோ (ரூ. இரண்டு லட்சம் கோடி) என லாபம் பார்த்ததாகத் தெரியவந்துள்ளது. ஆம்ஸ்டர்டாமில் பணியிலிருக்கும் 11 விழுக்காடு மக்கள் சுற்றுலாத் துறையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : உச்சமடையும் போராட்டம்... பதுங்கு குழிக்குள் ட்ரம்ப்