இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் நாஜிப்படையை ரஷ்யா வீழ்த்தியதன் 75ஆவது ஆண்டை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் மாஸ்கோவில் பிரமாண்ட அணிவகுப்பிற்கு ரஷ்யா திட்டமிட்டிருந்தது. ஆனால் உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பால் மக்கள் வெளிவர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் இரண்டாம் உலகப்போரின் 75ஆவது ஆண்டு வெற்றியைக் கொண்டாடும் வகையில் திட்டமிடப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஒத்தி வைத்துள்ளார்.
இதுகுறித்து புதின் பேசுகையில், ''மே மாதம் 9ஆம் தேதியன்று மக்களை ஒரே இடத்தில் கூட்டுவது மிகவும் ஆபத்தானது. அதனால் நான் இரண்டாம் உலகப்போர் வெற்றிக் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளையும், அதனையொட்டி நடக்கவுள்ள அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒத்தி வைக்கிறேன்.
மே 9ஆம் தேதி எங்களுக்கு புனிதமான நாள் தான். ஆனால் இங்கே வாழும் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் விலை மதிப்பற்றது. இந்த வெற்றிக் கொண்டாட்டங்கள் தற்போதைய சூழல் அனைத்தும் முடிவுக்கு வந்த பின் கொண்டாடப்படும்'' என்றார்.
ரஷ்யாவில் கரோனா வைரஸால் இதுவரை 27 ஆயிரத்து 938 பேர் பாதிக்கப்பட்டும், 232 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
இதையும் படிங்க: கரோனாவின் அடுத்த தலைநகராக மாறும் அமெரிக்கா!