தொழில் வளர்ச்சியில் முன்னிலை வகிக்கும் அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, கனடா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய 7 நாடுகளை உள்ளடக்கியது ஜி-7 கூட்டமைப்பு.
இந்தக் கூட்டமைப்பின் 47ஆவது உச்சி மாநாடு இங்கிலாந்தின் கார்ன்வால் மாகாணத்தில் நேற்று (ஜுன்.11) தொடங்கியது. சிறப்பாகக் கட்டமைப்போம்' என்ற கருப்பொருளில் மாநாடு நடைபெறுகிறது.
இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடிக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அழைப்பு விடுத்திருந்தார்.
அதனை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்கிறார். அதன்படி, இன்றும் நாளையும் (ஜுன் 12,13) காணொலி வாயிலாகக் கலந்துகொள்கிறார்.
பிரதமர் மோடி இந்த மாநாட்டில் இவ்வாறாகச் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்பது இது இரண்டாவது முறையென்பது குறிப்பிடத்தக்கது.
இதுமட்டுமின்றி, இந்தியாவுடன், ஆஸ்திரேலியா, தென் கொரிய நாட்டுத் தலைவர்களும் இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்கின்றனர்.