சீனாவின் வூஹானில் தோன்றிய கோவிட்-19 பெருந்தொற்று, தற்போது 180-க்கும் அதிகமான நாடுகளில் பரவி உலகம் இதுவரை கண்டிடாத பெரும் பேரிடரை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய இந்நோயால் உலகளவில் இதுவரை 52 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
கோவிட்-19ஐ கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் தத்தளித்து வரும் வேளையில், அந்நோய்க்கு தடுப்பு மருந்தை உருவாக்கி, அதனை மனிதர்கள் மீது பரிசோதிக்கும் பணியில் ஏராளமான ஆராய்ச்சி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
அந்த வகையில், உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களுள் ஒன்றான ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சார்பில் உருவாக்கப்பட்ட தடுப்பு மருந்து, முதல் கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் ஆயிரம் தன்னார்வலர்கள் மீது பரிசோதனை நடத்தப்பட்டது.
இதையடுத்து, அடுத்து இரண்டு கட்டங்களில் 10 ஆயிரத்து 260 தன்னார்வலர்கள் மீது இந்த தடுப்பு மருந்தைச் செலுத்தி பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாக அப்பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த பரிசோதனைகள் தடுப்பு மருந்தின் திறனை உறுதி செய்யும். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள இந்த தடுப்பு மருந்து 'ChAdOx1' என்ற வைரஸை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
இதுகுறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பு மருந்து குழு தலைவர் ஆன்ட்ரூ பொலார்டு கூறுகையில், "தடுப்பு மருந்து உருவாக்கும் வேலையில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. இந்த தடுப்பு மருந்து முதியவர்கள் மீது எம்மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை மதிப்பிடவுள்ளோம். பரிசோதனைக்கு ஒப்புக்கொண்ட தன்னார்வலர்களுக்கு நாங்கள் நன்றி கடன்பட்டுள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க : தடுப்பூசி திட்டங்களில் காலதாமதம்... ஆபத்தில் 80 மில்லியன் குழந்தைகள் - எச்சரிக்கும் WHO