பிரான்ஸ் நாட்டிலுள்ள லயன் நகரில் தேவாலயத்திற்கு வெளியே கிரேக்க பாதிரியார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் நடத்திய அடையாளம் தெரியாத நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
பலத்த காயமடைந்த அந்த பாதிரியார் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்படும் துப்பாக்கி மூலம் இந்த தாக்குதலை அந்த அடையாளம் தெரியாத நபர் நடத்தியுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
தேவாலயத்திற்கு அருகில் உள்ள அனைத்து பகுதிகளையும் காவல் துறையினர் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளனர். பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
இஸ்லாம் மதம் குறித்தும் முகமது நபி குறித்தும் பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு செய்தி நிறுவனம் கேலிச்சித்திரம் வெளியிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நைஸ் சிட்டியில் உள்ள தேவாலயத்திற்கு வெளியே அடையாளம் தெரியாத நபரால் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் சிக்கி 3 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.