கரோனா வைரஸ் நோய் உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்திவருகிறது. உலகம் முழுவதும் இந்த நோயால் கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், ஐரோப்பிய கண்டத்தில் மட்டும் 2,20,000 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 11,987 பேர் உயிரிழந்தனர்.
டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் கோவிட்-19 குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. இதில், உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிராந்திய இயக்குநர் மருத்துவர் ஹன்ஸ் க்ளுகே பங்கேற்றார். அவர் கூறுகையில், "நோயால் பாதிக்கப்படும் 10 பேரில் ஒருவர் சுகாதாரத்துறை பணியாளர். இது எங்களுக்கு மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது.
நேற்று மட்டும் இத்தாலியில் 6,200 சுகாதாரத்துறை பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தன்னலமற்று செயல்படும் இவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் நோய் பாதிப்பு அதிகம் உள்ளது.
பாதிக்கப்படும் 10 பேரில் 6 பேர் ஐரோப்பிய கண்டத்தைச் சேர்ந்தவர் ஆவர். நோயால் உயிரிழக்கும் 10 பேரில் ஏழு பேர் ஐரோப்பியவர் ஆவர். இதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் இத்தாலியில் உயிரிழப்பின் விகிதம் குறைந்துள்ளது" என்றார்.
இதையும் படிங்க: கோவிட் 19: உலக தலைவர்களை விமர்சித்த உலக சுகாதார அமைப்பு