காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்ததையடுத்து இந்த விவகாரத்தில் சர்வதேச கவனத்தை ஈர்க்க பாகிஸ்தான் கடுமையாக முயற்சித்துவந்தது. இதையடுத்து உலகளவில் பல நாடுகளின் தலைவர்கள் தங்களது கருத்துகளை வெளிப்படுத்திவருகின்றனர்.
முன்னதாக நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கூட்டத்தில் பாகிஸ்தானின் நிலைப்பாட்டிற்கு சீனா மட்டுமே ஆதரவளித்துவந்தது. மீதமுள்ள நாடுகள் அனைத்தும் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காணுமாறு கூறியுள்ளன.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வரும் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் இந்தியாவின் சார்பாக உரையாற்றவுள்ளார். பிரதமர் மோடி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் கூட்டத்தில் காஷ்மீர் விவகாரம் சிறப்பு கவனம் பெறும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் காலநிலை மாற்றம், உலகளாவிய சுகாதாரம் போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கும் இக்கூட்டத்தில் தீர்வு காண வாய்ப்புள்ளது.