கடந்த ஞாயிற்றுக்கிழமை என்ஆர்ஐ தொழிலதிபர் ஜிபி இந்துஜா மற்றும் அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்த மெய்நிகர் தீபாவளி பிரார்த்தனை கூட்டத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வை பாரம்பரிய முறையில் விளக்கு ஏற்றி இளவரசர் சார்லஸ் தொடங்கி வைத்தார். இதில், பல தலைவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
விழாவின் சிறப்பு அம்சமாக பாலிவுட்டின் முன்னணி - பின்னணி பாடகர்களான சோனு நிகம், கைலாஷ் கெர், அனுப் ஜலோட்டா, சங்கர் மகாதேவன் மற்றும் ரஹத் ஃபதே அலி கான் ஆகியோரால் கிட்டத்தட்ட மூன்று மணி நேர இசைக் கச்சேரி நடைபெற்றது.
இதில் பேசிய போரில் ஜான்சன், “இந்த மெய்நிகர் சந்திப்பில் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இது தீபாவளியின் உணர்வை மக்கள் வீடுகளுக்குள் கொண்டுவருகிறது. அதே நேரத்தில் மக்கள் பாதுகாப்பாக இருக்க உதவுகிறது. குறிப்பாக கரோனா தொற்று நோய் காலத்தில் மக்களிடையே உதவும் தன்மை, சமூக உணர்வுடன் செயல்படுவது உள்ளிட்டவைகளை பிரிட்டிஷ் இந்து, சீக்கிய மற்றும் ஜெயின் சமூகங்கள் ஒற்றுமையாக செயல்பட்டது என்னை வியப்படையச் செய்தது. தீபாவளி இருட்டை வெல்வது போல், அனைவரும் ஒன்றிணைந்து கரோனாவை விரட்டுவோம்” எனத் தெரிவித்தார்.
ஆண்டுதோறும் நடைபெறும் தீபாவளி கொண்டாட்டம் இந்தாண்டு கரோனா தொற்று காரணமாக பிராத்தனை கூட்டமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.