சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளை அச்சுறுத்தி வந்த கொவிட்-19 (கொரோனா வைரஸ்), தற்போது ஐரோப்பிய நாடான இத்தாலியையும் மிரட்டத் தொடங்கியுள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வைரஸ் பாதிப்பைக் கருத்தில் கொண்டு, ஆண்டுதோறும் இத்தாலியின் வெனிஸ் நகரில் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற 'கார்னிவல் தெ வெனிஸியா' திருவிழாவை ரத்து செய்ய அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
தவிர, மக்கள் அதிகம் கூடும் இடங்களான கால்பந்து மைதானம், சினிமா தியேட்டர்களையும் மூடவும் உத்தரவிட்டுள்ளது.
வைரஸ் காரணமாக அந்நாட்டில் இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 130 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள வெனிஸ், மிலான் ஆகிய நகரங்களில் மக்கள் வெளியூர்களுக்கு செல்ல கெடுபிடி விதிக்கப்பட்டுள்ளது. வெனிதோ, லொம்பார்தி ஆகிய நகரங்களுக்கு அடுத்த இரண்டு வாரங்கள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயணிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நகரங்களைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பள்ளிகள், கல்லூரிகள், கடைகள் மூடப்பட்டுள்ளன. விளையாட்டுப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கொவிட்-19 வைரஸால் ஐரோப்பிய நாடுகளிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட நாடு இத்தாலி என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, வைரஸைக் கட்டுப்படுத்த ஆசிய நாடான தென் கொரியாவும், மத்திய கிழக்கு நாடான ஈரானும் போராடி வருகின்றன. சீனாவை அடுத்து வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள நாடாக தென் கொரியா திகழ்கிறது.
இதையும் படிங்க : அமெரிக்க அதிபர் இன்று இந்தியா வருகை