அமெரிக்கா - சீனா இடையே கடந்த ஓராண்டாக வர்த்தகப் போர் நிலவி வருகிறது. இந்த வர்த்தகப் போர் உலகப் பொருளாதாரத்தில் மந்த நிலையை ஏற்படுத்தியுள்ளது. எனினும், அமெரிக்கா - சீனாவின் வர்த்தகப்போர், இந்தியாவுக்குச் சாதகமாக அமைந்துள்ளதென ஐநா வர்த்தக மற்றும் வளர்ச்சிக் குழுமம் (UN conference on Trade and Development) நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஐநா வெளியிட்டிருந்த இந்த ஆய்வு அறிக்கையில், வர்த்தகப் போர் காரணமாக அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகம் கணிசமாக குறைந்துள்ளது. இது தைவான், மெக்சிகோ, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது. மேலும், இதனால் இந்தியா, தென் கொரியா, கனடா ஆகிய நாடுகளும் பலனடைந்துள்ளன.
இதையும் வாசிங்க : வர்த்தக ஒப்பந்தம்: சீன அதிபருக்கு ட்ரம்ப் அழைப்பு
இந்தியாவைப் பொறுத்தமட்டில் அமெரிக்காவுடன் கூடுதலாக ஏற்றுமதியில் ஈடுபட்டு ரூ. 5 ஆயிரம் கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2019இல் முதல் ஆறுமாதங்களில் ரசாயனம் (ரூ. ஆயிரத்து 702 கோடி) , உலோகம் மற்றும் தாது (ரூ. ஆயிரத்து 208 கோடி), மின் கருவிகள் (ரூ. 589 கோடி), இயந்திரங்கள் (ரூ. 482 கோடி) அதிகளவில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதுதவிர, வேளாண் பொருட்கள், அலுவலக இயந்திரங்கள், ஜவுளி, ஃபர்னிச்சர் உள்ளிட்டவையும் அதிகளவில் ஏற்றுமதியாயின" எனக் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடனான வர்த்தகப் போரின் காரணமாகவே, பிராந்திய விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தத்தில் ( Regional Comprehensive Economic Partnership - RCEP) பங்குபெறுமாறு இந்தியாவைச் சீனா வற்புறுத்தி வந்ததாக நிபுணர்கள் தெரிவிக்கின்றன. ஆனால், நாட்டின் நலன் கருதி இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையம் வாசிங்க : பிராந்திய விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தத்துக்கு 'நோ' சொன்ன இந்தியா