2003ஆம் ஆண்டு சீனாவை கலங்கடித்த கரோனோ வைரஸ் மீண்டும் சீனாவை மட்டுமல்லாமல் அமெரிக்கா, இந்தியா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளையும் கிறங்கடித்துவருகிறது. இந்த வைரஸால் சீனாவில் இதுவரை சுமார் ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா வைரஸ் தங்கள் நாட்டுக்குப் பரவாமல் இருக்க பல நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன.
இந்நிலையில் பிரான்ஸ் சுகாதாரத் துறை அமைச்சர் ஆக்னஸ் புசின் நேற்று செய்தியாளர்களிடையே, சீனாவிலிருந்து வந்த இரு நபர்களுக்கு கரோனா வைரஸ் இருப்பதாகவும், மேலும் நாட்டில் பலருக்கு இந்த வைரஸின் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறியுள்ளார்.
மேலும், இன்றைய சூழலில் இந்த வைரஸின் தாக்குதலை தடுப்பது என்பது இயலாது காரியாம் என்ற அவர், அப்படியே முயற்சித்தாலும் அது சாத்தியமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், அந்நாட்டு மருத்துவர்கள் இந்தத் தொற்று நோய்க்கு மிக விரைவில் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டுமெனவும், அந்த வைரஸின் மூலத்தைக் கண்டறிந்து அதற்கான மாற்று மருந்தினை கண்டுபிடிக்கவும் வலியுறித்துள்ளார்.
மேலும் நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட நபருக்கு பாரிஸில் சிகிச்சையளித்து வருவதாகவும், மேலும் பரவாமலிருக்க அவரை தனிமைப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சீனாவின் உஹான் நகரில் மட்டும் இதுவரை கரோனா வைரஸ் பாதிப்பினால் 25 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா வைரஸ் : சீனாவில் 25 பேர் உயிரிழப்பு