பிரான்ஸ் நாட்டில் கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளதால், அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அந்நாட்டில் வரும் சனிக்கிழமை முதல் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படவுள்ளது.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவந்து அதிலிருந்து மீண்ட பல ஐரோப்பிய நாடுகளில் தற்போது இரண்டாவது அலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக பல நாடுகளில் கட்டுப்பாடுகள் படிப்படியாக கடுமையாக்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் பிரான்சில் கரோனாவின் இரண்டாவது அலை தாக்கத்தொடங்கியுள்ளது. இதனால், அந்நாட்டில் கடந்த சில நாள்களாக வைரஸ் பரவும் விழுக்காடு பல மடங்கு அதிகரித்துவருகிறது.
பிரான்சில் கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில், அந்நாட்டு உயர்மட்ட அலுவலர்களுடன் ஆலோசனை நடத்திய அதிபர் இமானுவேல் மேக்ரான், புதிய கட்டுப்பாடுகள் தொடர்பான வழிமுறை குறித்து தொலைக்காட்சி வாயிலாக மக்களிடம் உரையாற்றினார்.
அப்போது, நான்கு வாரங்களுக்கு நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பித்து அறிவிப்பு வெளியிட்டார். வரும் சனிக்கிழமை (அக். 17) தொடங்கி காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை, நான்கு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவித்துள்ளார்.
கரோனா தொற்று காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்ட பிரான்சின் சில பகுதிகளுக்கு இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாரிஸ் நகரிலும், பிரான்சை சுற்றியுள்ள எட்டு நகரங்களிலும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் இதுவரை 7.79 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 33 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.