ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டுமென பிரிட்டன் மக்கள் 2016ஆம் ஆண்டு வாக்களித்தனர். இதையடுத்து, பிரிட்டன் வெளியேற்றத்தை (பிரெக்ஸிட்டை) சுமுகமானதாக்க ஐரோப்பிய ஒன்றியம்-பிரிட்டன் இடையே 'பிரெக்ஸிட் வரைவு ஒப்பந்தம்' கையெழுத்தானது.
ஆனால், பிரெக்ஸிட் வரைவு ஒப்பந்தத்தை ஏற்கமறுத்த பிரிட்டன் எம்பிகள் மூன்று முறை அதனை நிராகரித்துவிட்டனர். இதனால், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்காக பிரிட்டனுக்கு விதிக்கப்பட்ட 2019ஆம் தேதியானது, தற்போது 2019 அக்டோபர் 31ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
பிரெக்ஸிட் ஒப்பந்தம் மீது பிரிட்டன் எம்பிகளிடன் ஆதரவை பெறமுடியாமல் போனதால் தெரசா மே கடந்த ஜூன் மாதம் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, பிரெக்ஸிட் பிரச்னையை தீர்த்துவைக்க கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் கடந்த மாதம் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், பிரதமர் போரிஸ் தலைமையிலான அரசு ஒப்பந்தமில்லாத பிரெக்ஸிட்டை (No deal Brexit) நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக குற்றச்சாட்டுகளும், விமர்சனங்களும் வலுத்து வருகின்றன.
பிரெக்ஸிட் ஒப்பந்தமின்றி நடக்கும் பட்சத்தில் பிரிட்டன் எதிர்கொள்ள நேரிடும் பேராபத்தை விவரிக்கும் 'ஆப்ரேஷன் எல்லோஹாமர்' என்ற ரகசிய அரசு ஆவணத்தை சண்டே டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டு அந்நாட்டு மக்கள் இடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து ஐரோப்பியா ஒன்றியத்தின் துணை ஆணையருக்கான தலைமை செய்தித்தொடர்பாளர் நடாஷா பெர்டவுட் (Natasha Bertaud) பேசுகையில், "ஒப்பந்தமின்றி பிரிட்டன் வெளியேறும் பட்சத்தில், அந்த நொடியே ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டவிதிகளுக்கு அப்பார்பட்ட நாடாக பிரிட்டன் மாறிவிடும்.
மேலும், பிரெக்ஸிட் வைரவு ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள மாறுதலுக்கான காலமும் (Transition Period) இல்லாமல்போய்விடும்.
ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் ஜான் கால்ட் ஜங்கர் (Jean-Claude Junker) கூறுவது போன்று இந்த வகை பிரெக்ஸிட்டை (Hard Brexit) யாரும் விரும்பவில்லை. அதுபோல, பிரிட்டன் மக்களும், நிறுவனங்களுக்கு இது பேராப்பத்தை ஏற்படுத்தக்கூடும்" என்று எச்சரித்துள்ளார்.