ஐரோப்பிய ஒன்றயத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து நாளை பிரிட்டன் வெளியேறுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இருந்த பிரிட்டன், அதிலிருந்து வெளியேறுவதற்காக 2016ஆம் ஆண்டு பொது வாக்கெடுப்பு நடந்தியது. இதற்கு 51 விழுக்காடு மக்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், பலத்த போராட்டத்திற்குப் பின் கடந்த டிசம்பர் மாதம் பிரெக்ஸிட் ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரெக்ஸிட்டை முன்வைத்தே தனது தேர்தலை சந்தித்து வெற்றியும் பெற்றார். இந்நிலையில், ஐரோப்பிய நாடாளுமன்றமும் பிரெக்ஸிட்டுக்கு ஒப்புதல் தரவே, நாளை இரவு 11 மணியளவில் பிரிட்டன் வெளியேறவுள்ளது. இருப்பினும், ஐரோப்பிய ஒன்றியத்துடன் பொருளாதார நடவடிக்கைகள் இந்த வருடம் முழுவதும் தொடரும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 28 உறுப்பினர்களைக் கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் முதல் நாடு பிரிட்டன் என்பதால் ஐரோப்பிய கண்டத்தின் முக்கிய நகர்வாக இது பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பிரெக்ஸிட் என்றால் என்ன? #brexit