பிரான்ஸ் நாட்டின் பிரதான அடையாளமாக திகழ்ந்துவரும் ஈஃபிள் டவர் 1889ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 324மீ உயரம் கொண்ட இந்த டவரை ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் பார்வையிட்டு வருகின்றனர்.
கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மார்ச் மாதம் 13ஆம் தேதி முதல் ஈஃபிள் டவர் மூடப்பட்டது. இந்நிலையில், பிரான்ஸில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், நினைவு சின்னங்களும், சுற்றுலா தளங்களும் சில நிபந்தனைகளுடன் திறக்கப்படுவதற்கு அனுமதியளிக்கப்பட்டது.
இதையடுத்து தலைநகர் பாரிஸில் உள்ள ஈஃபிள் டவர் திறக்கப்பட்டுள்ளது. ஈஃபிள் டவரின் முதல் இரண்டு தளங்களுக்கு செல்ல மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏறுவதற்கும், இறங்குவதற்கும் வெவ்வேறு பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. 11 வயதிற்குமேல் இருக்கும் குழந்தைகள் முதல் அனைவரும் செல்லலாம் என்றும், ஆனால் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப்போருக்கு பின் ஈஃபிள் டவர் இத்தனை நாள்கள் பூட்டப்பட்டிருந்தது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கோவிட்-19 தாக்கம்: விசா விதிமுறைகளில் கொண்டுவந்த மாற்றம்