ஜாக்ரெப் (குரோஷியா): குரோஷியா நாட்டு பிரதமருக்கு கரோனா தொற்று சோதனை செய்யப்பட்டதில், தொற்று உறுதியாகியுள்ளதாக அந்நாட்டு அமைச்சரவை தெரிவித்துள்ளது.
குரோஷியா நாட்டுப் பிரதமர் தனது மனைவிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். அதேசமயம், அவருக்கு கரோனா சோதனை செய்யப்பட்டதில் தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது.
அந்நாட்டின் தொற்றுநோயியல் வல்லுநர்களின் பரிந்துரையை ஏற்று, குரோஷியா பிரதமர் ஆண்ட்ரேஜ் பிளென்கோவிக், மீண்டும் கரோனா பரிசோதனை மேற்கொண்ட நிலையில் அவருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது.
"தற்போது, அவரது உடல்நிலை நல்ல நிலையில் உள்ளது, வீட்டிலிருந்தபடியே தனது அலுவல்களை அவர் கவனித்துவருகிறார். அதுமட்டுமல்லாது, மருத்துவர்கள், தொற்றுநோயியல் வல்லுநர்களின் ஆலோசனைகளையும் பின்பற்றிவருகிறார்" என அந்நாட்டு அமைச்சரவை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: நைஜரின் முன்னாள் குடியரசுத் தலைவர் மமடோ டாண்ட்ஜா காலமானார்