சார்லஸ் பிராட்லாவின் பிடிவாதத்தால் பிரிட்டனின் அரசியல் சட்டமே திருத்தப்பட்டது. சார்லஸ் பிராட்லா பிரிட்டனில் மிகவும் பிரபலமான நாத்திகர். அவர் பிரிட்டன் நாடாளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார். அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டபோது, "கடவுளின் சாட்சியாக" என்று சொல்லிப் பதவி ஏற்குமாறு கூறினார்கள். ஆனால் அவரோ, "இல்லாத கடவுளை நான் சாட்சிக்கு அழைத்துவர முடியாது" என்று கூறி, கடவுளின் பெயரால் பதவிப் பிரமாணம் செய்துகொள்ள முடியாது என உறுதியாக மறுத்துவிட்டார்.
”உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை; இந்தப் பேரவை நம்புகிறது, இந்த நாட்டின் அரசியல்சாசனம் நம்புகிறது, அதற்குக் கட்டுப்பட்டவர் நீங்கள்; எனவே, 'கடவுள் சாட்சியாக' என்று கூறித்தான் நீங்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ள வேண்டும்; இதை நீங்கள் மறுத்தால் உங்கள் தேர்வு ரத்து செய்யப்படும்" என்றார்கள்.
அதற்கு சார்லஸ் பிராட்லா, "இந்த அவையின் ஆயுள் காலம் ஐந்து ஆண்டுகள்தான்; இதற்காக நான் கட்டிக் காத்துவரும் என் கொள்கைகளை விட்டுவிட முடியாது; என் தேர்வை நீங்கள் ரத்து செய்ய விரும்பினால், தாராளமாக செய்து கொள்ளுங்கள்" என்றார்.
மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவரது தேர்வை ரத்து செய்தனர். அவருடைய தொகுதிக்கு மீண்டும் தேர்தல் நடந்தது; மீண்டும் பிராட்லா போட்டியிட்டார்; மீண்டும் வெற்றி பெற்றார்; மீண்டும் அதே பிரச்சனை!
"எனக்கென்று ஒரு கொள்கை; ஒரு நம்பிக்கை இருக்கிறது, அதை எந்தக் காரணத்திற்காகவும் விட்டுத் தர இயலாது" என்று கடவுள் சாட்சியாக பதவிப் பிரமாணம் செய்ய பிராட்லா மறுத்துவிட்டார். மீண்டும் அவர் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
பின்னர் மீண்டும் அவர் தொகுதிக்குத் தேர்தல் நடந்தது; மூன்றாவது முறையும் பிராட்லா போட்டியிட்டார்; இந்த முறை முந்தைய இரண்டுமுறை வாங்கிய வாக்குகளைவிட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் பிராட்லா. இம்முறை கெஞ்ச ஆரம்பித்தார்கள்; தயவு செய்து பிடிவாதம் பிடிக்காமல் இந்த அவையின் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளுங்கள் என்றார்கள். அதற்கு பிராட்லா சொன்னார், "நான் யார், என் கொள்கைகள் என்ன என்பதைத் தெரிந்து கொண்டுதான் என் தொகுதி மக்கள் என்னை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கிறார்கள்; என் தேர்வை ரத்து செய்வதன் மூலமாக என்னைத் தேர்ந்தெடுத்த மக்களை நீங்கள் அவமதிக்கிறீர்கள்; அவர்களுடைய ஜனநாயக உரிமைகளை இழிவு செய்கிறீர்கள்; அவர்களுடைய தன்மானத்திற்கே சவால் விடுகிறீர்கள். இதற்கு மேல் பேச என்னிடம் எதுவுமில்லை" என்று கூறி அமர்ந்துவிட்டார்.
இந்தமுறை பிரிட்டன் பாராளுமன்றம் பணிந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், கடவுளின் பெயரால் மட்டுமன்றி மனசாட்சியின் பெயராலும் பதவி ஏற்கலாம் என்று பிரிட்டனின் அரசியல் சட்டமே திருத்தப்பட்டது. இன்று பகுத்தறிவுவாதிகள் உட்பட பலரும் மனசாட்சியின் பெயரால் பதவி ஏற்பதற்கு சார்லஸ் பிராட்லாதான் காரணம்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி கொண்டு வந்த 157 பொக்கிஷங்கள்