சீனாவில் கடந்தாண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் பெருந்தொற்று தற்போது அந்நாட்டில் குறைந்திருந்தாலும் 200க்கும் மேற்பட்ட நாடுகளிலும், பிராந்தியங்களிலும் வேகமாக பரவியுள்ளது. இத்தொற்றால் இதுவரை உலகளவில் 28,30,082 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,97,246 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறிப்பாக, இந்த வைரஸால் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பிரிட்டனில் நேற்று ஒரேநாளில் 684 பேர் இத்தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால், அந்நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19,506ஆக அதிகரித்துள்ளது.
ஐரோப்பாவில் அதிகமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் பிரிட்டன் நான்காவது இடத்தில் உள்ளது. இதில், முதல் மூன்று இடங்களில் உள்ள இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸில் ஏற்கனவே 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, பிரிட்டனில் இதுவரை 1,43,464 பேர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 721 பேர் குணமடைந்துள்ளனர். பிரிட்டனில் ஒரேநாளில் 28, 532 பேர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். முன்னதாக இதன் எண்ணிக்கை ஐந்தாயிரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆப்ரிக்காவைத் துரத்தும் கரோனா; பேரழிவைத் தருமா? - ஐ.நா. அச்சம்